ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது ஏன்?
|ஆடிப்பெருக்கில் எந்த பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
சங்க நூல்களில் பெண்கள் நதிகளுக்கு விழா எடுத்தார்கள். நதியை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது. ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது சுமங்கலி பெண்கள் குறிப்பாக புதுமணப் பெண்கள் தாலி கயிறை மாற்றிக் கொள்வார்கள். கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது, நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம். சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என 3 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஆடி 18 அன்று, பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். அதனால்தான் இந்த நாட்களில் மேற்கண்ட சடங்குகளை செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஆடிப்பெருக்கில் எந்த பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, ஆடிப்பெருக்கில் நல்ல நேரம் பார்த்து சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் என்பது நம்பிக்கை.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional