மும்மூர்த்திகளின் அம்சமான விநாயகர்
|மற்ற கடவுள்களைவிட விநாயகர் முந்தி வந்து பலன்களைத் தருபவர். அதனால்தான் அவரை, ‘முந்தி நாயகர்’ என்கிறார்கள்.
* இரட்டைப் பிள்ளையாரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் பெரிய கோவில்களில் காணலாம். மூன்று விநாயகர் ஒரே சன்னிதியில் அருள்பாலிப்பது மாணிக்கவாசகரின் ஆவுடையார் கோவிலாகும். பாண்டியனின் கட்டளைப்படி குதிரைகள் வாங்கச் சென்றார் மாணிக்கவாசகர். ஆவுடையார் அருகில் வெயில் காத்த விநாயகர் கோவில் உள்ளது. மாணிக்கவாசகரின் கனவில் தோன்றிய இத்தல விநாயகர், 'பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் நானே' என காட்டியருளினார். சிவனடியாரான மாணிக்கவாசகர், தான் கனவில் கண்ட காட்சியை மனத்தில் நிறுத்திய காரணத்தால், அந்த மூன்று விநாயகரையும், ஒரே சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் அம்சமாக இவ்விநாயகர்களை ஒரே இடத்தில் தரிசித்து மேன்மை பெறலாம். தந்தையைப் போல பிள்ளையும் அமைந்துள்ளதை உணரல் வேண்டும். சிவனைப் போன்று சிவந்தமேனி கொண்டவர். சிவனுக்கு ஐந்து தலைகள் இருப்பது போன்று, ஹேரம்ப கணபதிக்கும் ஐந்து தலைகள் உள்ளன.
* விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகே புளிச்சகுளம் கிராமத்தில் பஞ்சமுக விநாயகர் பத்துத் திருக்கரங்களோடு காட்சி தருகிறார். விநாயகருக்கு முக்கண் உள்ளது. சிவனைப் போன்றே தலையில் மூன்றாம் பிறை அணிந்திருக்கிறார். இவரும் ஐந்தொழிலின் அதிபதியாக அமைந்துள்ளார். இவரும் நடராஜரைப் போன்று நர்த்தன கணபதியாவார். சிவனின் இடப்புறம் பார்வதி தேவி இருப்பதுபோல இவரது இடப்புறம் வல்லபை என்ற தேவி இருக்கிறார்.
கணபதி தரிசனம்
* வழிபாடு, பூஜை, ஹோமம், யாகம் என எந்த இறைச்செயலைத் தொடங்குவதாக இருந்தாலும், முதலில் முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்டுவிட்டே தொடங்குவது அவசியம். அதனால்தான் விநாயகரை பூஜை அறையில் மட்டுமல்லாமல், வீட்டின் பல இடங்களில் வைத்து வணங்குகிறோம். எல்லா ஊர்களிலும் விநாயகர் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன.
* ஈசனின் திருமகனாகவும், முருகக் கடவுளின் அண்ணனாகவும், அம்மை சக்தியின் செல்லப் பிள்ளையாகவும், சைவம், கௌமாரம், சாக்தம் என மூன்று வழிபாட்டு முறைகளிலும் கொண்டாடப்படுகிறார் விநாயகர்.
* வைணவ சம்பிரதாயத்திலும் வெகுவாகக் கொண்டாடப்படுகிறார் விநாயகர். வைணவர்களின் முக்கியக் காவியமான மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல எழுதிக் கொடுத்தவர் விநாயகர். எழுதும்போதே எழுத்தாணி உடைந்ததால், தனது வலது தந்தத்தையே உடைத்து எழுதினார். இதனால் 'ஏகதந்தர்' என்றும் அழைக்கப்படுகிறார் கணபதி.
* விநாயகர் தமது தாய்-தந்தையரை அன்புடன் வழிபட்டதால் 'பிள்ளை' என்ற பெயருடன் 'ஆர்' என்ற மரியாதை அடைமொழி சேர்த்து 'பிள்ளையார்' என்று பெயர் பெற்றார்.
* 'கணபதி' என்கிற வார்த்தையில் 'க' என்பது ஞானத்தைக் குறிக்கிறது, 'ண' என்பது மோட்சத்தைக் குறிக்கிறது, 'பதி' என்னும் பதம் 'தலைவர்' என்று அர்த்தம் தருகிறது. ஞானத்தையும், மோட்சத்தையும் நமக்கு அளிக்கும் தலைவர், விநாயகர்.
* மற்ற கடவுள்களைவிட விநாயகர் முந்தி வந்து பலன்களைத் தருபவர். அதனால்தான் அவரை, 'முந்தி நாயகர்' என்கிறார்கள்.