சோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது?
|கவலையும், பதற்றமும் நிறைந்த விரும்பத்தகாத மனநிலை தான் மனஉளைச்சலுக்கு வழிவகுக்கிறது.
கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும் கடுமையான வலி உணர்வுகளை 'உளைச்சல்' என்று சொல்வதுண்டு. இது போன்ற உளைச்சல் மனதில் ஏற்படும் போது மனதுக்கு வலிக்கிறது. அது 'மனஉளைச்சல்' ஆகிறது. கவலையும், பதற்றமும் நிறைந்த விரும்பத்தகாத மனநிலை தான் மனஉளைச்சலுக்கு வழிவகுக்கிறது.
இத்தகைய மனஉளைச்சல் மனித மனங்களில் பல்வேறு வழிகளில் ஊடுருவுகிறது. முதுமையில் ஏற்படும் நோய்கள், தொடர் தோல்வி மற்றும் பிற காரணங்களால் மனஉளைச்சல் வருவதுண்டு.
இவற்றையும் கடந்து வித்தியாசமான ஒருவகையான மனஉளைச்சல் உண்டு. அது எதிரிகளால் ஏற்படும் மனஉளைச்சல் ஆகும். இது மிகவும் மோசமானதாகும். எனவேதான், இத்தகைய மனஉளைச்சலில் இருந்து தாம் விடுபட நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பாதுகாப்பு வேண்டியுள்ளார்கள்.
'நபி (ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மனஉளைச்சல் ஆகியவற்றிலிருந்து இறைவனிடம் தாம் பாதுகாப்புக் கோரி வந்தார்கள்' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
"நபி (ஸல்) அவர்கள் 'நீங்களும் இறைவனிடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மனஉளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்' என்றார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
"அய்யூப் (அலை) அவர்களிடம், 'உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'எதிரிகளிடமிருந்து ஏற்பட்ட மனஉளைச்சல்' என இவ்வாறு பதில் கூறுவார்கள்".
அவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதைக்கூட கடுமையான சோதனையாக அவர் கருதவில்லை. அவர் கருதியதெல்லாம் 'மன உளைச்சலைத்தான்' என்கிற போது அதன் வீரியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இத்தகைய மனஉளைச்சலில் இருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்.
"இறைவா! நான் இஸ்லாத்தை நின்ற நிலையில் பற்றிக்கொண்டவனாக என்னை நீ காப்பாயாக. மேலும், இறைவா! நான் இஸ்லாத்தை அமர்ந்த நிலையில் பற்றிக் கொண்டவனாக என்னை நீ காப்பாயாக! மேலும் இறைவா! நான் இஸ்லாத்தை அமர்ந்த நிலையில் பற்றிக் கொண்டவனாக என்னை நீ காப்பாயாக! எதிரிகளாலும், பொறாமைக்காரர்களாலும் ஏற்படும் மனஉளைச்சலை எனக்கு தந்துவிடாதே! என நபி (ஸல்) பிரார்த்தனை புரிந்தார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: ஹாகிம்)
நமக்கு ஏற்படும் தீங்கு, சோதனை, வேதனை, நோய், கஷ்டம், நஷ்டம், ஆபத்து, விபத்து, துன்பம், தோல்வி, இயலாமை போன்றவற்றைக் கண்டு எதிரிகள் மகிழ்ச்சி அடைவதுதான் எதிரிகளால் ஏற்படும் மனஉளைச்சல் ஆகும். அதுபோல, நமக்கு கிடைக்கும் நன்மை, சாதனை, ஆரோக்கியம், லாபம், உயிர் மற்றும் உடமை பாதுகாப்பு, மகிழ்ச்சி, வெற்றி, ஆற்றல் இவற்றைக் கண்டும் எதிரிகள் கவலை அடைவதுதான் அவர்களால் ஏற்படும் மனஉளைச்சல் ஆகும்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
"ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனும் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்". (திருக்குர்ஆன் 3:120)
எனவே நாம் பொறுமையுடனும், பயபக்தியுடனும் நடந்து கொண்டு இறைவன் வகுத்த வழியில் வாழ்ந்து இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெறுவோம். சோதனைகளை வெல்லும் சக்தியை நமக்கு அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.