உலகில் மனிதனுக்கு எது சொந்தம்? நபிகளார்
|உலகில் மனிதனுக்கு உண்மையில் எதுவெல்லாம் சொந்தம் என்பதை நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள்.
மனிதன் 24 மணிநேரமும் உழைக்க ஆசைப்படுகிறான். அவனது உடல் அதற்கு ஒத்துழைக்காது என்ற போதிலும் அவன் தனது வாழ்வின் பெரும் பகுதியினை உலகச் செல்வங்களைத் திரட்டுவதற்காகவே செலவிடுகிறான்.
அதனால் அவன் உடல் சோர்வும், மனச்சோர்வும் அடைந்து தனது ஆரோக்கியத்தை இழந்து நோயாளியாகி விடுகிறான். நினைத்த உணவை கூட உண்ண முடியாத நிலைக்கு அவன் ஆளாகி சராசரி மனித வாழ்வைக்கூட இழந்து தவிக்கின்றான்.
குதிரை இருந்தால் தான் சாட்டை தேவை. ஆனால் மனிதனோ குதிரையை விற்று சாட்டையை வாங்க முயல்கின்றான். ஆரோக்கியத்தை இழந்து விட்ட பின்பு செல்வத்தினால் என்ன பலன்?
இந்த உலகம் என்பது ஒரு மாயத்தோற்றமே. அது நம்முடன் இருப்பதைப் போன்று காட்டிக்கொள்கிறது. ஆனால் உரிய காலம் வரும்போது அது நம்மை மண்ணில் புரட்டிப் போட்டுவிடும்.
உலகில் மனிதனுக்கு உண்மையில் எதுவெல்லாம் சொந்தம் என்பதை நபிகளார் (ஸல்) இவ்வாறு கூறுகிறார்கள்:
1) அவன் உண்டு ருசித்து செரித்து கழித்த உணவு, 2) அவன் உடுத்தி மகிழ்ந்து கிழித்துவிட்ட ஆடை, 3) அவன் செய்த நல்ல-கெட்ட செயல்கள்.
இந்த மூன்றும் தான் மனிதனுக்கு சொந்தமானது என்கிறார்கள் நபிகளார் (ஸல்).
உங்களுக்குச் சொந்தமான இம்மூன்றிலும் மற்றவர் எவரும் உங்களிடம் பங்கு கேட்க முடியாது. இதுதவிர நீங்கள் தேடி வைத்த எல்லா செல்வங்களும் உங்களது மரணத்திற்கு பின் ரத்த உறவுகளால் பங்கு போடப்படும், அதற்காக அவர்கள் சண்டையிலும் ஈடுபடுவார்கள்.
இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
"எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி மனிதன் பெருமையடித்துக் கொள்கின்றானோ, அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான்". (திருக்குர்ஆன் 19:80)
"மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களில் இருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு". (திருக்குர்ஆன் 57:7).
எனவே இறைவன் அளித்த அருட்கொடைகளில் இருந்து ஒரு பகுதியை மனைவி மக்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு, எஞ்சிய இதரப்பகுதிகளை உங்களது ஆன்ம உயர்வுக்காக பயன்படுத்துங்கள். ஆன்மிகத்திற்காகவும், 'ஆஹிரத்' என்று சொல்லக்கூடிய மறு உலக வாழ்விற்காகவும், இந்த உலக வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ளவதே சிறந்ததாகும்.
மனிதன் தன் ஆன்ம வெற்றிக்காக உலகில் செலவிடும் நேரமே, மனித வாழ்வில் பாக்கியம் நிறைந்த நேரமாகும்.