< Back
ஆன்மிகம்
வலிப்பு நோய் தீர்க்கும் வலுப்பூர் அம்மன்
ஆன்மிகம்

வலிப்பு நோய் தீர்க்கும் வலுப்பூர் அம்மன்

தினத்தந்தி
|
16 Feb 2023 4:17 PM GMT

பொங்கலூர் நாட்டில் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் உள்ளதுதான், வலுப்பூர் அம்மன் கோவில். விக்கிரமாதித்த சோழ மன்னன் காலத்தில் ‘வலுப்பூரம்மன் கோவில்’ என்றும் அழைக்கப்பட்டதாக செப்பேடுகளில் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு, தனக்கென தனி வரலாறு, பாரம்பரியம், கலை, பண்பாடு பெற்றுத் திகழ்கிறது. கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில், பொங்கலூர் நாடும் ஒன்றாகும். பொங்கலூர் நாட்டில் வானவன் சேரி என்று அழைக்கப்படுகிற அலகுமலை கிராமத்தின் அருகில் அலகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட சேமலைக்கவுண்டம்பாளையத்தில் உள்ளதுதான், வலுப்பூர் அம்மன் கோவில். இந்தக்கோவில் முன் காலத்தில் 'பத்ரகாளியம்மன்' கோவில் என்றும், விக்கிரமாதித்த சோழ மன்னன் காலத்தில் 'வலுப்பூரம்மன் கோவில்' என்றும் அழைக்கப்பட்டதாக செப்பேடுகளில் காணப்படுகிறது.

சோழ மன்னன் விக்ரமாதித்தன் மகள் மைக்குழலிக்கு வலிப்பு நோய் இருந்தது. அரண்மனை வைத்தியர்கள் உள்பட பல வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றும், இந்த நோய் நீங்கவில்லை. இதுபற்றி அரசவை சான்றோர்களிடம் மன்னன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'இந்நோயை தெய்வ அருளால் மட்டுமே சரி செய்ய முடியும். கொங்கு நாட்டின் மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படுகிற பேரூரில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நோய் தீரும்' என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தன் மந்திரிகளுடன், மன்னர் விக்ரமாதித்தன் தன் மகள் மைக்குழலியை அழைத்துக்கொண்டு மேற்கு நோக்கி புறப்பட்டார். வழியில் ஒருநாள் இரவு மன்னன் தன் பரிவாரங்களுடன் வானவன்சேரியில் தங்கினார்.

அன்று இரவு பத்ரகாளியம்மன், மன்னரின் கனவில் தோன்றி 'வேட்கோவன் ஒருவன் கந்தாங்கண்ணியில் பூசாரியாக இருக்கிறான். அவனால் உன் மகளின் நோய் தீர்க்க வழி ஏற்படும்' என்று கூறி மறைந்தாள். அதனைத் தொடர்ந்து மன்னர் தன் காவலர்களை அழைத்து, பூசாரி வேட்கோவனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். அவர்களும் தேடிப்பிடித்து வேட்கோவனை அழைத்து வந்தனர்.

வேட்கோவனிடம் 'இந்த நோய் தீர என்ன வழி?' என்று மன்னர் கேட்டார். அதற்கு வேட்கோவன், "இளவரசி மைக்குழலியை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்று அங்கு இளவரசி முன்பு திரையிட்டு விளக்கு ஏற்றி, அந்த நிழல் உருவத்தை மணலில் படச்செய்து வலிப்பு நோயை கண்டறிய வேண்டும்" என்றார். அதன்படியே செய்ய ஏற்பாடு நடைபெற்றது. அப்படி செய்தபோது, இளவரசி மைக்குழலியின் உடலில் 32 இடங்களில் வலிப்பு நோய் காணப்பட்டது. இதையடுத்து இளவரசியின் நிழல் உருவத்தின் மீது சூடேற்றிய இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இதையடுத்து இளவரசியின் வலிப்பு நோய் முற்றிலுமாக குணமானது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னர் விக்ரமாதித்தன், பூசாரி வேட்கோவனுக்கு 6 கிராமங்களை தானமாக கொடுத்தார். வலிப்பு நோயை நீக்கியதால் இத்தல பத்ரகாளியம்மன், 'வலுப்பூரம்மன்' என்று அழைக்கப்படு கிறார். சுமார் 400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றதாக அறியப்படும் இந்த நிகழ்வு, நம் பண்டைய காலத்தில் வரலாறுகளை தெரிந்து கொள்ள உதவும் செப்பேடு ஒன்றில் காணப்படுகிறது.

மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் முன் மண்டபத்துடன் இந்தக்கோவில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் வலுப்பூரம்மனும், அர்த்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியும், பழைய விநாயகரும், மகா மண்டபத்தில் வடக்கு முகமாக கன்னிமாரும், விநாயகரும், நாகரும் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். பரிவார தெய்வங்களும் இதன் உள்ளேயே இருக்கிறது.

வலுப்பூர் அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமியில், பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். வலுப்பூர் அம்மனுக்கு உகந்த செவ்வரளி பூவை பக்தர்கள் அணிவிக்கிறார்கள். தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, இந்தக்கோவிலில் திருவிழா மற்றும் தேரோட்டம் நடத்தப்படுகிறது. கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அலகுமலை கயிலாசநாதர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரில் ஏற்றிவைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கயிலாசநாதர் கோவிலைச் சுற்றி தேரோட்டமும் நடத்தப்படும்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தாயம்பாளையம் பிரிவில் இருந்து வடக்கு நோக்கி சென்றால், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பூஜை நடைபெறுகிறது. திருப்பூரில் இருந்து பெருந்தொழுவு, அலகுமலை வழியாக ஆண் கோவில் என்ற இடத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி தார்சாலை வழியாக சென்றால் வலுப்பூர் அம்மன் கோவிலை அடையலாம்.

மேலும் செய்திகள்