< Back
ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் களைகட்டிய வைகுண்ட ஏகாதசி திருவிழா - மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் களைகட்டிய வைகுண்ட ஏகாதசி திருவிழா - மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

தினத்தந்தி
|
22 Dec 2023 8:10 PM IST

பகல்பத்து 10-ம் திருநாளான இன்று மோகினி அலங்காரத்தில் கருட மண்டபத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்து கிரீடம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்கார வைபவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேல் ஆழ்வார், ஆச்சாரியார்கள் மரியாதையான பின் 9 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானம் சேருவார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரக்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. ரெங்கநாதர் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்திற்கு பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் வைகுண்ட ஏகாதசி விழா களைகட்டியுள்ளது.

மேலும் செய்திகள்