ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி: நாளை சொர்க்கவாசல் திறப்பு
|வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம்,
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்து கிரீடம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடைபெற உள்ளது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.
இதைத்தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருள்வார். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார்.
அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. ரெங்கநாதர் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சொர்க்கவாசல் திறப்பு தினமான நாளை முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. இதேபோல் ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான வரும் 29ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும் நடைபெறும்.
எட்டாம் திருநாளான 30ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறும். 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. பத்தாம் திருநாளான ஜனவரி 1ஆம் தேதி தீர்த்தவாரியும், 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும், இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடையும்