< Back
ஆன்மிகம்
பசியாற்றும் வைக்கத்தப்பன்
ஆன்மிகம்

பசியாற்றும் வைக்கத்தப்பன்

தினத்தந்தி
|
13 Sept 2022 7:17 PM IST

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் அமைந்துள்ளது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. பகலிலும், இரவிலும் நடை சாத்தப்படும் போது, அர்ச்சகர் ஒருவர், நான்கு கோபுர வாசல்களிலும் வந்து, “யாரும் பசியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, நடையை சாத்தும் வழக்கம் இருக்கிறது.

கரன் என்னும் அசுரன், முக்தி அடைய வேண்டும் என்பதற்காக கடும் தவம் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தனும் ஆவான். அவன் முன்பாக தோன்றிய ஈசன், கரனிடம் மூன்று சிவலிங்கங் களைக் கொடுத்து "இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்" என்று கூறினார். மேலும் கரனை பின் தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் சிவபெருமான் அனுப்பிவைத்தார்.

ஒரு சிவலிங்கத்தை வலது கையிலும், மற்றொரு சிவலிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது சிவலிங்கத்தை தன்னுடைய வாயிலும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான் கரன். சிறப்பான இடத்தை தேர்வு செய்து அதில் சிவலிங்கங்களை நிறுவ நினைத்த கரன், தன்னுடைய பயணத்தின்போது களைப்பை உணர்ந்தான். அதனால் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தவன் தன்னுடைய வலது கையில் இருந்து சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்கு பிறகு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது இயலாமல் போனது.

சிவலிங்கம் அந்த இடத்திலேயே நிலைபெற்றுவிட்டதை உணர்ந்த கரன், அங்கு வந்த வியாக்ரபாதரிடம் அந்த சிவலிங்கத்திற்கு பூைஜ செய்து வழிபடும்படி கேட்டுக்கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்தபடி அங்கேயே தங்கிவிட்டார். கரன் அங்கிருந்து புறப்பட்டு, ஏற்றமானூர் என்ற இடத்தில் தன்னுடைய இடது கையில் இருந்த சிவலிங்கத்தையும், கடித்திருத்தி என்ற இடத்தில் தன்னுடைய வாயில் இருந்த சிவலிங்கத்தையும் நிறுவி வழிபட்டான். அதன்பலனாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

பிற்காலத்தில் பரசுராமர், வான் வழியில் வடதிசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் தென்பட்டது. அங்கு இறங்கிய பரசுராமர், அந்த சிவலிங்கத்திற்கு பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தார். அந்த சிவலிங்கம், கரன் என்ற அசுரனால், வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்பது தெரியவந்தது. அதுவே வைக்கம் மகாதேவர் அருளும் ஆலய இறைவன் என்று பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

இந்த ஆலயத்தின் கருவறையில் 2 அடி உயர பீடத்தின் மீது, 4 அடி உயரத்தில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கிய நிலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவரான இவருக்கு 'மகா தேவர்' என்று பெயர். வியாக்ரபாதர் வழிபட்ட காரணத்தால் 'வியாக்ரபுரீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. ஆனால் பக்தர்கள் அனைவரும் இவரை ஊரின் பெயரைக் கொண்டு 'வைக்கத்தப்பன்' என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு தனியாக சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடை சாத்தப்படும் போது, கோவில் அர்ச்சகர் ஒருவர், ஆலயத்தின் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து "யாரும் பசியாக இருக்கிறீர்களா" என்று கேட்கும் பழக்கம் உள்ளது. அப்படி யாரேனும் 'பசியாக இருக்கிறேன்' என்று கூறினால், அவரை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று, அவருக்கு உணவிட்டு பின்தான் கோவில் நடையை சாத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் அந்த ஆலயத்தில் பின்பற்றுகிறார்கள்.

மேலும் செய்திகள்