< Back
ஆன்மிகம்
சந்தனத்தை மருந்தாக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி
ஆன்மிகம்

சந்தனத்தை மருந்தாக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி

தினத்தந்தி
|
21 Feb 2023 9:30 PM IST

திருெநல்வேலி மாவட்டம் உவரியில் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணிய தலமாக இது பார்க்கப்படுகிறது. முன் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மணல் குன்றுகளாகவும், கடம்ப கொடிகள் அதிகளவில் வளர்ந்து, ‘கடம்ப வன’மாகவும் இருந்திருக்கிறது.

இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்காக கடம்ப வனத்தின் வழியே சென்று வந்தார். அப்போது ஒரு நாள் காலில் கடம்பக் கொடி சிக்கி, பால் முழுவதும் தரையில் கொட்டியது. இதே போல் தினமும் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் வந்தபோது, கடம்பக் கொடி காலில் சிக்கி பால் கொட்டுவது வழக்கமாகியது.

இதுபற்றி பயத்துடன் அந்தப் பெண் தன் கணவரிடம் கூற, அந்தப் பெண்ணின் கணவரோ, ஆத்திரத்துடன் அந்த கடம்பக் கொடியை வெட்டினார். அப்போது அந்தக் கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். அப்போது ஊர் பெரியவர் ஒருவர் சுவாமியின் அருளால், அருள்வாக்கு கூறினார். "ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால், ரத்தம் வடிவது நின்று விடும்" என்றார்.

ஆனால் சந்தனத்திற்கு எங்கே போவது என்று அனைவரும் திகைத்து நிற்க, அருள் வந்தவர் , அந்த வனப் பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார். அவர் சொன்னபடியே குறிப்பிட்ட இடத்தில் சந்தன மரம் இருப்பதைக் கண்டு ஊர் மக்கள் வியப்படைந்தனர். பின்னர் அந்த மரத்தின் குச்சியை எடுத்து வந்து அரைத்து, கடம்ப கொடியில் ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் பூசியதும், ரத்தம் வழிவது நின்று போனது.

அந்த இடத்தில் பரம்பொருளான சிவபெருமான், சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். சிவலிங்கத்தைச் சுற்றி, மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினர். சுயம்புவாக தோன்றியவர் என்பதால், அவருக்கு 'சுயம்புலிங்க சுவாமி' என்றே பெயரும் வைத்தனா். இவருக்கு தினமும் பாலா

பிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வந்தனர். சந்தனம் பூசியதும் ரத்தம் நின்றுபோனதால், இந்த ஆலயத்தில் இன்றும் இறைவனுக்கு சந்தனம் அரைத்து பூசப்படுகிறது. அதோடு இத்தல இறைவனை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி முழுவதும் பூசுவதற்குக் கொடுக்கின்றனர். இதனால் தீராத நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்தவும் செய்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரமோற்சவம் நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தை அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இக்கோவிலில் அருளும் அம்பாளின் திருநாமம், பிரம்மசக்தி என்பதாகும். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில், பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா வீற்றிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.

மேலும் செய்திகள்