பயத்தைப் போக்கும் உஜ்ஜயினி காலபைரவர்
|எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், பைரவர் சன்னிதிக்கு சென்று வழிபட்டு அர்ச்சனை செய்தால், எதிரிகளின் தொல்லை ஒழியும். தீவினைகள் அழியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிவபெருமானின் உக்கிர வடிவங்களுள் ஒன்றாக விளங்குகிறது பைரவர் திருக்கோலம். காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார். இவருக்கு சிவாலயங்களில் தனிசன்னிதி உண்டு. தன்னை நாடி வருகின்ற பக்தர்களின் பாவத்தை போக்குவதால் 'பைரவர்' என அழைக்கப்பட்டார். குறிப்பாக எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், பைரவர் சன்னிதிக்கு சென்று வழிபட்டு அர்ச்சனை செய்தால், எதிரிகளின் தொல்லை ஒழியும். தீவினைகள் அழியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வறுமை நீங்கி செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள். வளமான வாழ்க்கை வந்தமையும்.
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டான். அவன் முன் சிவபெருமான் தோன்ற காலதாமதமானது. உடனே அந்தகாசுரன் பஞ்சாக்னி குண்டம் அமைத்து, அதன் நடுவே அமர்ந்து அன்ன ஆகாரமின்றி கடும் தவம் இருக்கத் தொடங்கினான். அவன் உதடுகள் 'ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டே இருந்தன. அவன் தவத்தை கண்டு மகிழ்ந்த ஈசன், அந்தகாசுரன் முன்பு தோன்றி அவன் வேண்டியபடி அரிய, பல வரங்களை வழங்கினார். வரம் பெற்ற அந்தகாசுரனுக்கு அரக்க குணத்தோடு, ஆணவமும் தலை தூக்கியது. தன்னை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்ற எண்ணத்தில், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல இன்னல்களைச் செய்தான். அவனது கொட்டத்தை அடக்க நினைத்து தேவேந்திரன் முதலான தேவர்கள் அவனோடு போர் புரிந்தனர். ஆனால் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. பிரம்மதேவனும் தனது சக்திகளைப் பயன்படுத்தி அந்தகாசுரனை அழிக்க முயன்றார். அவரும் தோல்வியையேத் தழுவினார். வேறு வழியின்றி பிரம்மாவும், தேவர்களும் அந்தகாசுரனிடம் அடிபணிந்து 'உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறோம்' என்று கூறி சரணடைந்தனர்.
பின்னர், 'ஆண்சிங்கம் போன்றவன் நான்! என்னை வெல்வோர் யாருமில்லை; எனவே நீங்கள் அனைவரும் பெண்கள் போல் வளையல் அணிந்து, கண்களில் மைதீட்டி, சேலையுடுத்தி வாழ வேண்டும். யாரேனும் ஆண் போல் உடையணிந்து வந்தால் அந்தக் கணமே அவர்கள் அழிக்கப்படுவார்கள்' என்று கட்டளையிட்டான். வேறுவழியின்றி, தேவர்கள் அதற்குக் கட்டுப்பட்டனர். இந்த இழிநிலையை சிவபெருமான் ஒருவரால் மட்டுமே மாற்ற முடியும் என தேவர்கள் நினைத்தனர். எனவே மந்தார மலையை அடைந்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தனர். அவர்களுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாக கூறினார். அதன்படி சிவபெருமான் தன்னுடைய தத்புருஷ முகத்தில் இருந்து, பைரவரை உருவாக்கி அந்தகாசுரனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர அனுப்பிவைத்தார். கடுங்கோபத்துடன் சென்ற பைரவர், அந்தகாசுரனின் சேனைகள் அனைத்தையும் அழித்து, முடிவில் அவனை தன் சூலத்தால் குத்தித் தூக்கினார். அதைக்கண்டு தேவர்கள் ஆனந்தம் அடைந்தனர். பைரவரை போற்றித் துதித்தனர். அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த பல பைரவர்களை சிவபெருமான் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. பைரவ மூர்த்தியானவர், கொடுமையை அழிப்பதில் எவ்வளவு கோபம் கொள்கிறாரோ, அதேபோன்று கருணை புரிவதிலும் ஈடுஇணையற்றவர். பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தேடித்தருபவர்.
மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினில் காலபைரவர் ஆலயம் உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும். கோவிலின் நுழைவுவாசல் கோட்டை வடிவில் மால்வா கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது. கோவில் சுவரில் விநாயகர், விஷ்ணு, தேவி ஒரு சேர அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கோவில் அருகே ஆல மரத்தடியில் சிவலிங்கமும், அதன் எதிரே நந்தியும் இருக்கின்றன. மூலவர் காலபைரவர் 2 அடி உயரத்தில் நாய் வாகனம் இன்றி காட்சியளிக்கிறார். அவரது உடல் முழுவதும் வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக பைரவர் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள், பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம் செய்தும், வடை மாலை சாத்தியும், வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தும் வழிபடுவார்கள். ஆனால் உஜ்ஜயினி காலபைரவர் ஆலயத்தில் ஒரு வினோத வழக்கம் உள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனைப் பொருளுடன் மதுபாட்டிலையும் பைரவருக்கு சமர்ப்பிக்கின்றனர்.