< Back
ஆன்மிகம்
அம்பிகையை கொண்டாடுவோம்
ஆன்மிகம்

இன்று ஆடி முதல் வெள்ளி.. அம்பிகையை கொண்டாடுவோம்..!

தினத்தந்தி
|
19 July 2024 12:16 PM IST

ஆடி வெள்ளியன்று கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வது மேலான பாக்கியம் என்பதால், இன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில் தஷ்ணாயணத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன.

அவ்வகையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அம்பிகை வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறுகின்றன. ஆடி வெள்ளியன்று கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வது மேலான பாக்கியம் என்பதால், இன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருக்கலாம். அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் ஆரோக்கியம் சீராகும். அம்மனுக்கு கூழ்வார்த்தும் மஞ்சள் அரைத்து பூசியும் வழிபடுவது சிறப்பான பலன் தரும். ஆடி வெள்ளி நாட்களில் பால் குடம், முளைப்பாரி எடுத்து வழிபடுவதும் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது.

வீட்டில் அம்மனை பூஜிக்க விரும்புவோர், மாலையில் ஐந்து முக தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் ஆரோக்கியம் சீராகும்.

இந்த நாட்களில் கோவில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம், பூஜை செய்வார்கள். இன்று காய்கனி அலங்காரத்தில் அம்மனை தரிசனம் செய்ய, ஆண்டு முழுவதும் உணவு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும், இல்லத்தில் மங்கலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகள்