தீராத நோய்களைத் தீர்க்கும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்
|சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவள்ளூர் ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில். இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசமாகும்.
இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். இந்த திருத்தலத்தை திருமங்கையாழ்வார், மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடல்கள் புனைந்துள்ளனர். இவ்வாலய இறைவன் 'எவ்வுள் கிடந்தான்' என்றும், 'வீரராகவப் பெருமாள்' என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.
தல வரலாறு
ஆதி யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு பிள்ளைப் பேறு இல்லை. எனவே பிள்ளைப் பேறு வேண்டி, புருபுண்ய முனிவர் 'சாலியாகம்' எனும் யாகத்தை மிகவும் பக்தியுடனும், ஈடுபாடுடனும் செய்யத் தொடங்கினார். தினமும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை என்ற வகையில், ஒவ்வொரு முறைக்கும் மந்திரங்களை ஓதி நெய் எடுத்து ஹோமகுண்டத்தில் சேர்த்து, ஒரு வருட காலத்திற்கு யாகம் செய்து முடித்தார். இறுதி நாளன்று யாகம் முடிவு பெரும் சமயத்தில், ஸ்ரீமன் நாராயணன் ஹோம ஜூவாலையில் தோன்றினார்.
முனிவா் எதற்காக யாகம் நடத்தினாரோ, அதற்கான பலன் கிடைக்கும் வகையில் அவருக்கு பிள்ளை வரம் அளித்த நாராயணர், பிறக்கும் பிள்ளைக்கு, யாகத்தின் பெயரும் வரும் வகையில் 'சாலிஹோத்திரன்' என்று பெயர் வைக்கும்படி கூறி மறைந்தார். பிறகு முனிவர், யாக பிரசாதங்களை தனது மனைவிக்கு அளித்தார். பத்து மாதங்கள் கழித்து புருபுண்யருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீமன் நாராயணன் உத்தரவுப்படி முனிவரும் அந்த குழந்தைக்கு 'சாலிஹோத்திரன்' என்று பெயரிட்டார். சாலிஹோத்திரன் வளர்ந்து வருகையில் பல்வேறு நல்ல முன்னேற்றங்களுக்கான அறிகுறிகளுடன் விளங்கினார்.
ஒரு தை அமாவாசை நாளில் சாலிஹோத்திரன் திருவள்ளூர் வந்தபோது அங்கிருந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் தேவர்களும், வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் பலரும் நீராடுவதைக் கண்டார். உடனடியாக அங்கேயே ஓராண்டு காலத்திற்கு பெருமாளை வேண்டி கடும் தவம் மேற்கொண்டார். ஓராண்டுக்குப் பின் தவத்தை நிறைவு செய்த சாலிஹோத்திரன், தானும் ஹிருதாபநாசினியில் நீராடி காலை பூஜைகளை தொடங்கினாா். ஒரு வருட காலம் உணவும், நீரும் இன்றி தவம் மேற்கொண்டதால், அரிசி மாவு சிறிது எடுத்து அதில் பிரசாதம் தயார் செய்தார். அதை மூன்று பாகங்களாக்கி முதல் பகுதியை நாராயணருக்கும், இரண்டாவது பகுதியை விநியோகத்திற்கும், மூன்றாவது பகுதியை தனக்கும் வைத்துக் கொண்டார்.
அப்போது பெருமாள், ஒரு அந்தணர் வடிவம் தாங்கி, சாலிஹோத்திரர் பிரசாதம் விநியோகம் செய்ய காத்திருக்கும் இடத்திற்கு வந்தார். அவரைக் கண்டதும், சாலிஹோத்திரர் விநியோகம் செய்ய வைத்திருந்த பாகத்தை அளித்தார். அதை உண்ட பிறகும் அந்த அந்தணருக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதை அவரது முகம் உணர்த்தியது. அதுபற்றி கேட்டதற்கு, 'நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது' என்று அவர் பதிலளித்தார். எனவே தனக்கான பாகத்தையும் அந்த அந்தணருக்கே அளித்தார், சாலிஹோத்திரர். பின்னர் மீண்டும் உணவு, நீர் எதுவும் இல்லாமல் ஓராண்டு காலம் தவம் இயற்றினார்.
ஓராண்டு நிறைவடைந்ததும் மீண்டும் இறைவனை வழிபட்டு விட்டு, அதே போல் அரிசி மாவில் பிரசாதம் செய்து மூன்று பாகங்களை தயார் செய்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு அந்த அந்தணர் வந்தார். அவருக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த பாகத்தையும், தன்னுடைய பாகத்தையும் வழங்கினார், சாலிஹோத்திரர். பின்னர் 'நான் படுத்து ஓய்வெடுப்பது எவ்வுள்' என்று வேண்டினார், அந்தணர். சாலிஹோத்திரரோ தன் பர்ண சாலையை சுட்டிக் காட்டி, 'இவ்விடத்தில் தேவரீர் சயனிக்கலாம்' என்று கூறினார். அதன்படி தெற்கே தன்னுடைய தலையை வைத்து அந்தணர் படுத்தார். அப்போது ஆகாயத்தில் துந்துபி முதலான வாத்தியங்கள் முழங்கின. கந்தர்வர்கள் கானம் இசைத்தனர். அப்சரசுகள் நர்த்தனம் புரிந்தனர். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். ஏராளமான சுப சகுனங்கள் உண்டாயின.
மறுகணமே அங்கே சயனித்திருந்த அந்தணர், பெருமாளாக தோன்றி சாலிஹோத்திரருக்கு காட்சியளித்தார். அதைக் கண்டு ஆனந்தம் கொண்ட சாலிஹோத்திரரிடம், வேண்டிய வரம் கேட்கும்படி பெருமாள் கூறினார். இதையடுத்து, 'இறைவா.. தாங்கள் இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும்' என்று சாலிஹோத்திரர் வேண்டினார். பெருமாளும் அப்படியே அருள்கிறார். இவரது நாபிக் கமலத்தில் பிரம்மன் இருக்கிறார். இடது திருக்கையால் பிரணவத்தை உபதேசித்தும், வலது கையை சாலிஹோத்திர முனிவரின் சிரசில் வைத்தும் திருக்காட்சி தருகிறார்.
இறைவன் 'படுக்க எவ்வுள்' என்று கேட்டு சயனித்ததால், இத்தலம் 'திருஎவ்வுள்' என்று அழைக்கப்பட்டதாகவும், இத்தல இறைவன் 'எவ்வுள் கிடந்தான்' என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 'திருவுள்' என்பதே காலப்போக்கில் மாறி, 'திருவள்ளூர்' என்றானதாக கூறப்படுகிறது. தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவி தாயார், 'வசுமதி' என்ற பெயரில் அவதரித்தார். அவர் திருமண வயதை அடைந்த நேரத்தில், வீரநாராயணர் என்ற பெயரில் பெருமாள் வேட்டைக்குச் சென்றார். அப்போது தாயாரை சந்தித்து மணம் முடித்துக் கொண்டார். திருமணத்திற்குப் பின்னர்தான், இத்தல இறைவனின் பெயர் வீரராகவப் பெருமாள் என்று மாறியதாம். அதுவரை இவர் 'கிங்கிருஹேசன்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்தக் கோவில் பல்லவர்கள், விஜயநகர பேரரசர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு வம்சங்களால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகம் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அஹோபில மடத்திற்கு வந்தது. இக்கோவிலில் இடம் பெற்றுள்ள சாலிஹோத்திரருக்கு, தை அமாவாசை அன்று பெருமாள் காட்சித் தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து, மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது ஐதீகமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.
சிவபெருமான் இத்தலத்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. இது தவிர சித்திரை பிரம்மோற்சவம், தை பிரம்மோற்சவம் என இரண்டு பிரமோற்சவங்கள் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஆகஸ்டு மாதத்தில் பவித்ர உற்சவம் நடைபெறும். ஆனி மாத தெப்பல், மாசி மாத தெப்பல் என ஆண்டிற்கு இரண்டு தெப்பல் திருவிழா நடைபெறும். ஆனி அமாவாசையில் மூலவருக்கு மூன்று நாட்கள் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. கார்த்திகையில் மூலவருக்கு தங்க கலசம் நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும், 9 மணியில் இருந்து 12 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். உற்சவ காலங்களில் கோவில் நடை திறக்கும் நேரம் மாற்றம் செய்யப்படும்.
அமைவிடம்
சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவள்ளூர். சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்து மூலமும் வந்து சேரலாம். சென்னை - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்தும் கோவிலை அடையலாம்.