< Back
ஆன்மிகம்
திருப்பதி உண்டியல் சுவாரசியம்
ஆன்மிகம்

திருப்பதி உண்டியல் சுவாரசியம்

தினத்தந்தி
|
27 Jan 2023 2:23 PM IST

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த உண்டியலுக்கு ‘காவாளம்’ என்று பெயர்.

இறைவன் தானாகவே விரும்பி வந்து எழுந்தருளிய தலங்கள், மிகவும் சிறப்புக்குரியவை. அப்படி திருமால் விரும்பி எழுந்தருளிய திருத்தலங்களாக, திருவேங்கடம், திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், நாங்குநேரி, புஷ்கரம், பத்ரி, சாளக்கிராமம் போன்றவை சொல்லப்படுகின்றன. இவற்றுள் திருவேங்கடம் என்கிற திருமலை திருப்பதி பிரசித்திப்பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் வேங்கடாசலபதி, 'சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், விருஷபாத்திரி, அஞ்சனாத்திரி, நாராயணகிரி, வேங்கடாசலம்' ஆகிய ஏழு மலைகளுக்கு சொந்தக்காரர். அதனால்தான் அவரை 'ஏழுமலையான்' என்று அழைக்கிறோம்.

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவில் கொண்ட இடம் 'திருமலை' என்றும், அவருடைய தேவியான ஸ்ரீபத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள மலை அடிவாரம் 'திருப்பதி' என்றும் வழங்கப்பட்டாலும், பெருமாள் குடிகொண்ட இடம் 'மேல் திருப்பதி' எனவும், தாயார் குடிகொண்ட இடம் 'கீழ் திருப்பதி' எனவும் அழைக்கப்படுவதே வழக்கமாகும்.

உலகிலேயே மாபெரும் பணக்காரக் கடவுள் யார் என்று கேட்டால், சிறு குழந்தை கூட 'திருப்பதி வேங்கடாசலபதி' என்று யோசிக்காமல் சொல்லிவிடும். அந்த அளவுக்கு இவர் பிரசித்தமானவர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த உண்டியலுக்கு 'காவாளம்' என்று பெயர். இந்த பிரமாண்ட உண்டியல்கள் நிரம்பியதும், திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், உடனடியாக அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலேயே நிரம்பி, வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.

பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதில் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அதை இங்கே பார்க்கலாம்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், கருவறையில் வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தை வலம் வரும் வழியில்தான் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். அதில் காணிக்கை செலுத்துவதற்கும் கூட பலரும் வரிசையில் நின்றுதான் செலுத்த வேண்டும். அப்படி காணிக்கை செலுத்துவதற்காக வரிசையில் நிற்கும்போது, ஒருவர் காணிக்கை செலுத்தும் நேரத்தில், உண்டியல் நிரம்பி விட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்தால், அந்த நபரை ஒரு ரூபாயாக இருந்தாலும் உண்டியலில் செலுத்த அனுமதிக்க மாட்டார்கள்.

அந்த நபர் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, நிரம்பிய உண்டியல் 'சீல்' வைத்து அகற்றி, அதே இடத்தில் வேறு உண்டியலை வைத்து விடுவார்கள்.

இப்போது முதலில் நின்ற இரண்டு பக்தர்கள் புதியதாக வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கை செலுத்தியதும், அவர்கள் இருவரையும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். உடன் 'சீல்' வைக்கப்பட்ட உண்டியலையும் அவர்கள் எடுத்துச் செல்வார்கள். சீல் வைக்கப்பட்ட உண்டியலானது, காணிக்கை எண்ணும் இடத்தில் பத்திரப்படுத்தப்படும். அப்போது தேவஸ்தான ஊழியர்கள், தங்களுடன் அழைத்து வந்த இரண்டு பக்தர்களிடம், ''இந்த உண்டியல் நிரம்பிவிட்டது. இதைக் கச்சிதமாக 'சீல்' செய்து எடுத்துக் கொண்டுபோனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன்' என்று சாட்சிக் கையெழுத்து வாங்கிக்கொள்வார்கள்.

வங்கியில் கடன் வாங்கிய ஒருவருக்காக நாம் போடும் சாட்சிக் கையெழுத்து போன்றதல்ல இது. இந்தக் கையெழுத்தை நாம் தைரியமாகப் போடலாம். இது சம்பிரதாயத்துக்காகத்தான் செய்யப்படுகின்றது. அதுசரி.. சி.சி.டி.வி. கேமராக்கள் கோவிலின் பல பகுதிகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இதுபோன்ற ஒரு நடைமுறை தேவையா? என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் தொடக்க காலத்தில், அதாவது கேமராக்கள் இல்லாத காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை, ஒரு சம்பிரதாயமாக இன்றும் திருப்பதி தேவஸ்தானம் கடைப்பிடித்து வருகிறது.

இதில் கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா?. இறைவனின் உண்டியல் காணிக்கைக்காக கையெழுத்திட்ட அந்த இரண்டு பக்தர்களுக்கு, மீண்டும் ஒரு முறை ஏழுமலையானை இலவசமாக, அதுவும் வெகு அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்குகிறது. இந்த தரிசனத்தின்போது, அவர்களை யாரும், 'சீக்கிரம்.. சீக்கிரம்..' என்று அவசரப்படுத்த மாட்டார்களாம். அதனால் நின்று நிதானமாக ஒரு முறை ஏழுமலையான தரினம் செய்யும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கிறது.

திருப்பதியில் பணம் கொட்டுவதன் காரணம்

உலகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வழிபடும் பக்தர்கள் அனைவரும், தங்களால் முடிந்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் திருப்பதியில் மட்டும் எந்த ஆலயத்திலும் இல்லாத அளவுக்கு, பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுவதற்கு என்ன காரணம் என்றால், அதற்கு புராணத்தில் இருந்து ஒரு நிகழ்வை மேற்கோள்காட்டுகிறார்கள்.

மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை விரும்பிய ஸ்ரீனிவாசன் (வேங்கடவன்), அந்த தேவியை மணம் முடிப்பதற்காக திருமண ஏற்பாடுகளை கவனித்தார். அந்த நேரத்தில் லட்சமி தேவி ஸ்ரீனிவாசப் பெருமாளை விட்டு விலகியிருந்தார். எப்போதும் இறைவனின் நெஞ்சில் வசிக்கும் லட்சுமிதேவி இல்லாத காரணத்தால், திருமணச் செலவுக்கான பணத்திற்கு பெருமாள் மிகவும் கஷ்டப்பட்டார். பணம் இல்லாமல் எப்படி திருமணத்தை விமரிசையாக நடத்துவது என்று அவர் தவித்தார்.

'தன் திருமணத்திற்கான பணம் முழுவதையும் தர வேண்டும் என்றால், உலகின் அனைத்து வளங்களையும் பெற்ற பெரிய செல்வந்தனால்தான் முடியும். அது குபேரன்தான்' என்று ஸ்ரீனிவாசப் பெருமாள் முடிவு செய்தார். பின்னர் குபேரனை அழைத்து, "வைகாசி மாதம் வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று, பத்மாவதியை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். லட்சுமி இப்போது என்னுடன் இல்லாத காரணத்தால், என்னிடம் செல்வம் இல்லை. எனவே திருமணத்திற்கு தேவையான பணத்தை நீதான் எனக்கு கொடுத்து உதவ வேண்டும்" என்றார்.

ஸ்ரீனிவாசப் பெருமாளின் வேண்டுகோளுக்கு குபேரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். எவ்வளவு தேவையோ, அவ்வளவு பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். அதன்படி ஸ்ரீனிவாசருக்கு, குபேரன் கொடுத்த தொகை ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் (இந்தத் தொகை பல்வேறு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன) என்று சொல்லப்படுகிறது. குபேரனிடம் கடன் வாங்கியதற்காக, ஸ்ரீனிவாசப் பெருமாள் கடன் பத்திரம் எழுதிக்கொடுத்தார்.

பின்னர் குபேரனிடம், "நீ கொடுத்த பணத்துக்கு, கலியுகத்தில் வட்டி செலுத்திக்கொண்டு, கலியுகத்தின் முடிவில் அசல் - வட்டி எல்லாம் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்" என்றாராம், ஸ்ரீனிவாசப் பெருமாள்.

அதற்காகத்தான் தன்னைத் தேடி வரும் பக்தர்களிடம், அவர்களின் பாவ கணக்குக்கு ஏற்ப, பணத்தை வசூல் செய்து, பக்தர்களின் பாவங்களை போக்குவதோடு, குபேரனின் கடனையும் அடைத்துக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் செய்திகள்