< Back
ஆன்மிகம்
திருப்பம் தரும் திருப்பதி பிரம்மோற்சவம்
ஆன்மிகம்

திருப்பம் தரும் திருப்பதி பிரம்மோற்சவம்

தினத்தந்தி
|
27 Sept 2022 3:10 PM IST

வாழ்க்கையில் திருப்பம் தரும் தெய்வமாக இருப்பவர், திருப்பதி ஏழுமலையான். இதனால்தான் ‘திருப்பதி வந்தால் திருப்பம் வரும்’ என்ற சொல்வழக்கு உருவானது.

திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் எளிமையாகவே நடத்தப்பட்டது. மாடவீதிகளில் ஏழுமலையான் வீதி உலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சீரான காரணத்தால், முன்பு போலவே, வெகு விமரிசையாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, இன்று (27.9.2022) செவ்வாய்க்கிழமை தொடங்கி, அக்டோபர் 5-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

இந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒன்பது நாட்களும், அரசு முறையிலான விருந்தினர்கள் தவிர, மற்ற பிரமுகர்களுக்கான சலுகைகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட் போன்றவை ரத்து செய்யப்படும். அனைத்து பக்தர்களுமே இலவச தரிசன வரிசையில் மட்டுமே ஏழுமலையானைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும் இந்த வேளையில், அந்த விழாவின் முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பிரம்மன் நடத்தும் 'பிரம்மோற்சவம்'

படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே 'பிரம்மோற்சவம்' ஆகும். ஆலயத்தின் கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் இறைவனின் சக்தியை, உற்சவர் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து நிகழ்த்தப்படும் வீதிஉலாவிற்கு `உற்சவம்' என்று பெயர். இந்த நடைமுறைக்கு, கடவுளே, பக்தர்களைத் தேடி வந்து அருள்புரிவதாக ஐதீகம்.

சோழ மன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். அங்கு எழுந்தருளிய இறைவனை தரிசிப்பதற்காக, வானுலகைச் சேர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடியிருந்தனர். அப்போது பெருமாளுக்கு பெரும் விழா ஒன்றை நடத்த பிரம்மன் அனுமதி வேண்டினார். அதற்கு இறைவனின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து தொடங்கப்பட்டதே, திருமலை பிரம்மோற்சவம் என்கிறார்கள்.

பக்தர்களுக்கு கடன்படும் ஏழுமலையான்

திருப்பதிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் காதில் பதிவது, அங்கு ஒலிக்கும் வேங்கடேச ஸ்தோத்திரம்தான். இதை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி. அந்த பாடலில் வரும் வரிகளில் ஒன்று, 'விநா வேங்கடேஸம் ந நாதோ ந நாத' என்பதாகும். இதற்கு 'உன்னைத் தவிர வேறு தெய்வமில்லை. உன்னையே சரணடைகிறேன்' என்று பொருள். இப்படி வேண்டி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு, சீனிவாசப் பெருமாளின் அருள்காட்சி கிடைத்தது. பக்தர்களாகிய நாமும் ஏழுமலையானை இவ்வாறு துதி பாடி வழிபட்டால், அவரது அருள் முழுமையாக நமக்குக் கிடைக்கும். அதனை ஏழுமலையானே, மார்க்கண்டேய மகரிஷியிடம் சொல்லியிருக்கிறார்.

அதாவது "என்னை 'கோவிந்தா' என்று ஒரு முறை அழைத்தால், நான் உனக்கு கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை 'கோவிந்தா' என்று அழைத்தால், அந்த கடனுக்கு வட்டி செலுத்துவேன். மூன்றாவதாக 'கோவிந்தா' என்று கூப்பிட்டால், அந்த வட்டிக்கு வட்டி தருவேன்" என்று கூறியுள்ளார். அதனால்தான், திருமலை திருப்பதி முழுவதும், 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற சரண கோஷம் எதிரொலிக்கிறது. ஏழுமலையான், குபேரனுக்கு மட்டுமே கடன்பட்டவராக இல்லாமல், தன்னுடைய நாமத்தை உச்சரிக்கும் பக்தருக்கும் கடன்பட்டவராக இருப்பது விசித்திரமான விஷயம்தான்.

எளிமையை விரும்பும் ஏழுமலையான்

திருமலை மடைப்பள்ளியில் தயாராகும் சிறப்பு நிவேதனம் லட்டு. அது தவிர வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீராபாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை, லட்டு ஆகிய நிவேதனங்களும் தயாராகின்றன. மேலும், சித்ரான்னம், வடை, முறுக்கு, அதிரசம், போளி, மவுகாரம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு, ஏழுமலையானின் அடியார்களான பக்தர்களுக்கு வழங்கப்படும்.

திருமலை மடைப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகளை, சீனிவாசப் பெருமாளின் தாயாரான வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம். மடைப்பள்ளியில் ஏராளமான நிவேதனம் தயாரிக்கப்பட்டாலும், ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக படைப்பது என்னவோ, வெறும் தயிர் சாதம்தான். அந்த தயிர் சாதத்தையும், மண் சண்டியில்தான் வைத்து படைக்கிறார்கள். ஏழுமலையானுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது.

ஏழுமலையான் தரிசன முறை

இந்தியாவில் உள்ள பெருமாளின் 8 சுயம்பு மூர்த்த தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று. இங்கு பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார். பொதுவாக திருப்பதிக்கு வருபவர்கள், நேராக திரு மலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் வரிசையில் நின்று கொள்வதும், பின்னர் அவரை தரிசித்து விட்டு, உடனடியாக வீடு திரும்புவதுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் திருப்பதி ஏழுமலையான எப்படி தரிசிக்க வேண்டும் என்பது ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி முதலில் கீழ் திருப்பதியில் அருளும், கோவிந்தராஜப் பெருமாளை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்க வேண்டும். அதன்பிறகே திருமலையின் மீது ஏற வேண்டும். அப்போதும் நேராக சென்று ஏழுமலையானை தரிசிக்கக் கூடாது. திருமலையில் உள்ள வராக தீர்த்தக்கரையில் அருளும் வராக மூர்த்தியை தரிசிக்க வேண்டும். அதன்பிறகுதான் ஏழுமலையானை வழிபட வேண்டும்.

உலக நாடுகளின் வாசனை திரவியங்கள்

பொதுவாக, பெருமாளுக்கு அபிஷேகங்களை விட, அலங்காரங்களே விமரிசையாக செய்யப்படும். ஏனெனில் அவர் 'அலங்காரப் பிரியர்' ஆவார். திருமலையில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருவேங்கடவனுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரப்பொருட்கள் பற்றி அறியும் போது நம் விழிகள் வியப்பால் விரியும்.

வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக உயர்தரமான குங்குமப்பூ, ஸ்பெயினில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கஸ்தூரி என்ற வாசனை பொருளானது அண்டை நாடான நேபாளத்தில் இருந்து தருவிக்கப்படுகிறது. உயர்தரமான பூனையின் உடலில் இருந்து பெறப்படும் புனுகு என்ற வாசனைப்பொருள் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.

பாரிஸ் நகரில் இருந்து விமானங்கள் மூலமாக பல்வேறு வாசனாதி திரவியங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து விமானம் மூலம் பக்குவப்படுத்திய ரோஜா மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து உயர்தரமான சூடம், அகில், சந்தன கட்டைகள், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையானுக்காக கொண்டுவரப்படுகின்றன.

அபிஷேகத்தின்போது தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன், மற்ற வாசனாதி திரவியங்கள் சேர்த்து கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். அத்துடன் 50-க்கும் மேற்பட்ட வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் நடக்கும். அதன் பிறகு கஸ்தூரி சாற்றப்பட்டு, புனுகு தடவப்படும்.

வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்வு

27.9.2022 - மாலை கொடியேற்றம், இரவு பெரிய

சேஷ வாகனம்

28.9.2022 - காலை சின்ன சேஷ வாகனம்,

இரவு அன்ன வாகனம்

29.9.2022 - காலை சிம்ம வாகனம்,

இரவு முத்துப்பந்தல் வாகனம்

30.9.2022 - காலை கற்பக விருட்ச வாகனம்,

இரவு சம்வபூபாள வாகனம்

1.10.2022 - காலை மோகினி அவதாரம்,

இரவு கருட வாகனம்

2.10.2022 - காலை அனுமன் வாகனம்,

மாலை தங்க ரதம், இரவு யானை வாகனம்

3.10.2022 - காலை சூரியபிரபை வாகனம்,

இரவு சந்திர பிரபை வாகனம்

4.10.2022 - காலை தேரோட்டம், இரவு குதிரை வாகனம்

5.10.2022 - காலை ஸ்ரீசக்கரம் தீர்த்தவாரி,

இரவு கொடியிறக்கம்

சிறந்த பலனைத் தரும் பிறந்த தின தரிசனம்

ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு தானதர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு உடலாலும், உள்ளத்தாலும் செய்வது அவசியம். அவ்வாறு செய்வதால், இந்த கலியுக பிறவியிலேயே இறைவனது அருளைப்பெற இயலும் என்பது சான்றோர்களின் வாக்கு. அதோடு ஒருவர் தன்னுடைய பிறந்தாளில் திருமலை வேங்கடவனை வழிபட்டாலும், சிறப்பான பலன்களைப் பெறலாம். அதுபற்றி பார்ப்போம்.

* திங்கட்கிழமை பிறந்தவர்கள், நவக்கிரகங்களில் சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களாவர். இவர்கள் திங்கட்கிழமையில் சந்திர ஓரையான காலை 6 மணியளவில் திருமலையானுக்கு நடைபெறும் விஷேச பூஜையில் கலந்துகொள்வதால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும்.

* செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், நவக்கிரகங்களில் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களாவர். அவர்கள் ஏழுமலையானை, செவ்வாய்க்கிழமையில் வரும் செவ்வாய் ஓரையில் வணங்குவது நன்மைகளைத் தரும்.

* புதன்கிழமை பிறந்தவர்கள், கல்வியைத் தரும் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களாவர். அவர்கள், புதன்கிழமை அன்று புதன் ஓரையில் ஏழுமலையானை வணங்கினால் புண்ணியம் பெருகும்.

* வியாழக்கிழமை பிறந்தவர்கள், நவக்கிரகங் களின் குருவான, வியாழனின் ஆதிக்கம் பெற்றவர்கள். அவர்கள் வியாழக்கிழமை அன்று, குரு ஓரையில் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

* வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள், அசுர குருவான சுக்ரனின் ஆதிக்கம் பெற்றவர்களாவர். அவர்கள் வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் ஏழுமலையானை வழிபட்டால் சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

* சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள், தங்களின் பிறந்த கிழமையில் திருப்பதி ஏழுமலையானுக்கு அதிகாலை நடக்கும் சகஸ்ர நாம அர்ச்சனையிலும், அதன் பிறகு நடக்கும் சாற்று முறை வைபவத்திலும் கலந்துகொண்டால் மகிழ்ச்சியான வாழ்வமையும்.

மேலும் செய்திகள்