< Back
ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
29 March 2024 7:45 AM IST

பங்குனி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு தங்கம், பவளம், வைடூரியத்திலான நகைகளாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் வஸ்திரங்களாலும் மணக்கோல அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியே பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார். அதேசமயத்தில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சியம்மனும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபம் வந்தனர்.

அங்கு முருகப்பெருமான் தனது தாய், தந்தையரான மீனாட்சியம்மன் சுந்தரேசுவரருக்கு வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றார். பின்னர் கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மணமேடையான ஆறுகால் மண்டபத்தில் 12.20 மணியளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். 12.30 மணியளவில் பிரியாவிடையுடன், சுந்தரேசுவரரும் 12.35 மணியளவில் மீனாட்சியம்மனும் மணமேடையில் வந்து வீற்றிருந்தனர். தொடர்ந்து அக்னி வளர்த்து அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

மேலும் முருகப் பெருமானின் பிரதிநிதி பட்டரும், தெய்வானை பிரதிநிதியாக பட்டரும் பட்டாடையும் பூமாலையும் மாறி, மாறி மாற்றினார். பின்னர் நாதஸ்வரம் ஒலிக்க, கெட்டிமேளம் முழங்க பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் நடத்தி வைக்க, முருகப்பெருமான், தெய்வானைக்கு மங்கல நாண் சூட்டி திருக்கல்யாணம் நடந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அட்சதை தூவி சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது ஏராளமான பெண்கள் புதிய மஞ்சள் தாலிக்கயிறு மாற்றி கொண்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்த பக்தர்கள் மொய் எழுதி சென்றனர். இரவு 7 மணியளவில் 16 கால் மண்டபம் வளாகத்தில் பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேவேளையில் சர்வ அலங்காரத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து விடைபெற்று மதுரைக்கு புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி விழாவில் இன்று சிகர நிகழ்ச்சியாக மகா தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்