< Back
ஆன்மிகம்
திருமண வரம் அருளும் திருநறையூர் நம்பி
ஆன்மிகம்

திருமண வரம் அருளும் திருநறையூர் நம்பி

தினத்தந்தி
|
27 Oct 2023 10:26 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் அமைந்துள்ளது, திருநறையூர் நம்பி கோவில். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தல வரலாறு

அனைத்தையும் துறந்து இறைவன்பால் நாட்டம் கொள்ள வேண்டியவர்கள், முனிவர்கள். ஆனால் மேதாவி மகரிஷி என்பவர், மகாவிஷ்ணுவே தனக்கு மருமகனாக வரவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் ஆகாமல், பெண் பிள்ளை இல்லாமல் எப்படி இந்த வேண்டுதல் நிறைவேறும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாது அனுதினமும், தான் வழிபடும் திருநறையூர் வைணவ ஆலயத்திற்குச் சென்று அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சக்கரத்தாழ்வார் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்யலானார்.

முனிவரின் ஆசையை நிறைவேற்ற விருப்பம்கொண்ட பரந்தாமன், மகாலட்சுமியைப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்த மகாலட்சுமி, மேதாவி முனிவர் தவம்செய்த வகுள(மகிழ) மரத்தடியில், ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத்தில் குழந்தையாக அவதரித்தார். யாருமற்ற அந்தக் குழந்தையை தன் மகளாக நினைத்து வளர்த்தார், முனிவர். வஞ்சுளவல்லி என்னும் திருநாமம் சூட்டப்பட்ட அந்த பெண் பிள்ளை, முனிவரது குடிலில் அவரோடு இணைந்து திருமாலை வணங்கி வந்தது.

தேவியை பிரிந்து வாழ்ந்த விஷ்ணு சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தேவியை மணம்புரிய விரும்பி, தேவி இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு கருடனிடம் பணித்தார். அதன் படியே மகாலட்சுமி தேவியை தேடி புறப்பட்டார், கருடன். பல ஊர்களைச்சுற்றி காணக்கிடைக்காத நிலையில் மேதாவி முனிவர் வசித்த திருநறையூர் தலத்திற்கு வந்துசேர்ந்தார். திருநரையூரை சுற்றி வட்டமடித்த கருடாழ்வார் சோர்ந்து போய், முனிவர் வசித்த குடிலின் மீது அமர்ந்தார். அப்போது குடிலை விட்டு வெளியே வந்த மேதாவி முனிவரின் மகள்தான், தான் தேடி வந்த மகாலட்சுமி என்பதை கருடன் அறிந்து கொண்டார். பின்னர் நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, லட்சுமி தேவி இருக்கும் இடத்தைக் கூறினார்.

முனிவரிடமும், தேவியிடமும் திருவிளையாடல் நடத்த விரும்பிய மகாவிஷ்ணு, மானுட வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தார். அங்கே தனியாக இருந்த வஞ்சுளவல்லியிடம் தாகம் தீர்க்க தண்ணீர் தருமாறு கேட்டார். தண்ணீருடன் வந்த தேவியின் கரம் பற்றினார். அந்த சமயம் அங்கே வந்த முனிவர் இந்தக் காட்சியைப் பார்த்து வெகுண்டெழுந்தார். அப்போது பெருமாள் தன்னுடைய இரு தோள்களிலும் சங்கு, சக்கர அடையாளத்தைக் காட்டி தான் யாரென்று முனிவருக்கு உணர்த்தினார்.

வந்திருப்பது தான் தினமும் வழிபடும் பரந்தாமன் என்பதையும், இதுவரை தன்னிடம் வளர்ந்தவர் மகாலட்சுமி என்பதையும், தனக்கு அருள் செய்யவே இறைவன் இவ்வளவு பெரிய நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்பதையும், மேதாவி முனிவர் புரிந்து கொண்டார். மகாவிஷ்ணுவை வணங்கினார். அப்போது மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை மணம் முடித்து தருமாறு கேட்க, அதற்கு ஒரு தந்தையாகவும், பக்தனாகவும் சில நிபந்தனைகளை இறைவன் முன் வைத்தார், மேதாவி முனிவர்.

`வஞ்சுளவல்லியை திருமணம் முடித்து வைகுண்டம் அழைத்துச் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருள்பாலிக்கவேண்டும். தனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியை முன்னிலைப் படுத்தியே அனைத்து உற்சவங்களும், பூஜைகளும் நடக்கவேண்டும்' என்பதாய் மேதாவி முனிவர் வைத்த வேண்டுகோள் அனைத்தையும் பெருமாள் ஏற்றுக்கொண்டார். அடுத்து தனிஒருவராய் வந்து பெண் கேட்பதை ஊரார் ஏற்கமாட்டார்கள், பந்துமித்திரர்களுடன் வரவேண்டும் என்ற நடை முறையை லேசான தயக்கத்துடன் கூற, அதை புரிந்துக்கொண்ட பெருமாள் தன் முன்னோர்களான ப்ரித்யுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்) ஆகியோரின் திருவுருவங்களையும் தானே எடுத்து வந்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். பின்னர் பிரம்மனை அழைத்து திருமணம் செய்யப்பட்டது.

முனிவரின் கோரிக்கைக்கு பெருமாள் செவிசாய்த்ததின் காரணமாக, இத்தலத்தில் தேவிக்கே அனைத்திலும் முன்னுரிமை தரப்படுகின்றது. வீட்டுப் பெண்களை 'நாச்சியார்' என்று செல்லமாக அழைப்பது தஞ்சை மாவட்டத்தின் மரபுகளில் ஒன்றாகும். அதனடிப்படையில் இக்கோவில் 'நாச்சியார்கோவில்' என்று அழைக்கப்படுகிறது. ஆலய வாசலிலும், கருவறைக்கு அருகிலும் நின்றுபார்த்தால் தேவியே அனைவருக்கும் காட்சிதருகிறார். அனைத்தையும் தானே நிர்வாகம் செய்வதை உணர்த்துவதுபோல இடுப்பில் சாவிக்கொத்துடன் நின்றகோலத்தில் இருக்கும் தாயாரை, தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். பெருமாள் சற்று வடக்காக தள்ளிநின்று மறைவாக காட்சியளிக்கிறார். திருமணக்கோலத்திலேயே இருவரும் காட்சியளிப்பதால் திருமணத்திற்கு வந்ததாகக் கூறப்படும் ப்ரிதியுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன்(சங்கர்னன்), திருமணம் செய்துவைத்த பிரம்மன் ஆகியோரும் கருவறையில் இருந்தவாறே காட்சி யளிக்கின்றனர்.

மூலவர் சன்னிதியின் விமானம், ராஜகோபுரத்தை நினைவூட்டுகிறது. இதை `ஹேம விமானம்' என்கின்றனர். ஆழ்வார் களால் பெருமாளும், நாச்சியாரும் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி 'திருநரையூர் நம்பி-வஞ்சுளவல்லி' என்னும் திருநாமம் கொண்டும், உற்சவர் 'இடர்காத்தவரதன்' என்னும் திருநாமம் கொண்டும் அருள்பாலிக்கின்றனர். இத்தல இறைவன் ஸ்ரீனிவாசன் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார். கல் கருடன் இவர்களுக்கு முன்னால் தனிச் சன்னிதியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக் கிறார். இவரது சன்னிதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விஷேச திருமஞ்சனங்கள் நடக்கிறது.

பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளாக இடச்சுற்றில் சக்கரத்தாழ்வாரும், ஆஞ்சநேயரும், அஷ்டபெருமாள்களும் (எட்டு பெருமாள்கள்), வலதுசுற்றில் லட்சுமிநரசிம்மரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர். பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள், மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க, அதன் நடுவே மேதாவி முனிவர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். கருடனால் சிறப்புப்பெற்ற இத்தலத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இரண்டு நிஜக் கருடன்கள், உச்சிக்கால பூஜைநேரத்தில் வந்து நைவேத்திய பொருட்களை உண்டு வந்துள்ளன. அவைகளின் மறைவிற்குப் பின் பிரகாரத்தில் அதற்கென தனிச் சன்னிதி அமைத்துள்ளனர். இங்கு மோட்சதீபம் ஏற்றி வழிபடுவது நடைமுறையாக உள்ளது. கோவிலின் வடபுறத்தில் தலதீர்த்தமான மணிமுத்தா தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் ஆகும்.

இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாக வைகாசி வசந்த உற்சவம், ஆவணி திருக்கல்யாணம், மார்கழி பிரம்மோற்சவம், பங்குனி தேரோட்டம் ஆகியவற்றைக் கூறலாம். இவைகளில் வருடத்தின் பின்பகுதியில் வரும் இரு உற்சவங்களும் மிகவும் பிரபலமானதாகும். இதுசமயம் நடைபெறும் வீதி உலாவின்போது தாயார் அம்ச வாகனத்தில் முன்னே செல்ல, பெருமாள் கருட வாகனத்தில் பின்னே செல்கிறார். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.


கவலை தீர்க்கும் கல் கருடன்

இவ்வாலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடதுபுறம் இருந்து அருள்பாலிக்கிறார், கல் கருடன். பெருமாளுக்கும் தாயாருக்கும் நடப்பதுபோலவே தினசரி ஆறுகால பூஜை இந்த கல் கருடனுக்கும் நடைபெறுகிறது. பெரும்பாலான வைணவ தலங்களில் கருட பகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதைச் சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். கல் சிற்பமாக இருந்தால் சிறிய அளவில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்தக் கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதும், இச்சிலையே உற்சவ காலத்தில் வீதியுலா கொண்டு வரப்படு வதும் எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

கர்ப்பக்கிரகத்தில் இருந்து நான்கு பேர், பின்னர் எட்டு பேர், அடுத்து பதினாறு பேர், முப்பத்திரண்டு பேர், கடைசியாக அறுபத்து நான்கு பேர் என படிப்படியாக ஆட்கள் கூடி கல் கருடனை தேரடி வரை சுமந்துவந்து, அவர்மீது பெருமாளை ஏற்றிவைக்கின்றனர். பெருமாளை சுமந்து செல்லும் சந்தோஷத்திலும், புளகாங்கிதத்திலும், கசிந்துருகும் கல் கருடனின் மேனி வியர்ப்பது, புராணகாலத்திலிருந்து இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கும் செய்தியாகும்.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோவில் உள்ளது.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்.

மேலும் செய்திகள்