திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்
|புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கி.பி. 12, 13-வது நூற்றாண்டில் சோழ, சாளுக்கிய மன்னர்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அக்னி ஆற்றின் தென்கரையில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சுகந்த பரிமளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இதேபோல் கர்ப்ப கிரகத்திற்கு அருகே உள்ள விநாயகரும், வெளியே உள்ள நந்தியும் சுயம்புவாக உருவானதாக கூறப்படுகிறது. எல்லா கோவில்களிலும் நந்தியம்பெருமான் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக்கோவிலில் ராஜகோபுரத்துக்கு முன்பு நந்தி தேவர் உள்ளார். தினசரி சூரிய ஒளி சிவபெருமான் மீது விழுகிறது. இந்த நிகழ்ச்சியானது சூரியன் சிவபெருமானை வணங்கி விட்டு தன் கடமையை தொடங்குவது போல் அமைந்துள்ளது.
சுகந்தம், பரிமளம் என்றால் 'வாசனை நிரம்பியது' என்று பொருள். அதனால் 'நறுமணம் நிரம்பிய பெருமான்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு திருமணநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அன்னை சக்தி இங்கு 'பெரியநாயகி' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 2 அம்பாள் சன்னிதிகள் தனித்தனி விமானங்களுடன் உள்ளன.
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்- பெரியநாயகி அம்பாளை மனமுருகி வேண்டினால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதேபோல் நாக தோஷம், புத்திர தோஷம் மற்றும் ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது. தீராத வியாதி உள்ளவர்கள், இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி, மண்டபத்தில் தங்கி சுவாமியையும்-அம்பாளையும் வழிபட்டால் வியாதிகள் குணமாகி பூரண நலமுடன் திரும்புவார்கள்.
தல வரலாறு
இங்கு வசித்த வணிகர் ஒருவர், தனது மகளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்கு மணம் முடிக்க நினைத்தார். ஆனால் வணிகரின் தங்கை மகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இருப்பினும் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக தனது மகளை தங்கை மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். இந்தநிலையில் வணிகர் திடீரென இறந்தார். அதிர்ச்சியில் அவரது மனைவியும் இறந்தார். மாமன் இறந்த செய்தி அறிந்து மதுரையில் இருந்து அவரது மருமகன் புறப்பட்டு வந்தார். மாமன் தனது மகளை தனக்கு திருமணம் செய்ய விருப்பமுடன் இருந்ததை உறவினர் வாயிலாக அறிந்தார். எனவே வணிகரின் மகளை தன் ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய எண்ணி அப்பெண்ணை அழைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரமானதால் இருவரும் வழியில் இருந்த ஒரு வில்வ மரத்தடியில் லிங்கமும், அதன் அருகே கிணறும் இருக்க கண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கிணற்றில் குளித்துவிட்டு லிங்கத்தை வணங்கி அருகே தலை வைத்து படுத்தனர். அப்போது ஒரு விஷப்பாம்பு தீண்ட வணிகரின் மருமகன் இறந்தார்.
வணிகரின் மகள் தனக்கிருந்த ஒரே உறவும் இறந்ததை கண்டு அலறி துடித்து, சிவபெருமானை வேண்டி நின்றாள். இதையடுத்து, சிவபெருமான் ஒரு முதியவராக காட்சி தந்து அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி, கிணற்றின் நீரை தெளிக்க வணிகரின் மருமகன் விஷம் நீங்கி எழுந்தார். அவர்களுக்கு இறைவன் வன்னி மரம், கிணற்றை சாட்சியாக வைத்து திருமணம் செய்து வைத்தார். இதனால் மனம் மகிழ்ந்த அந்த தம்பதியினர் வன்னிமர பரிமளேஸ்வரரை வணங்கி புறப்பட்டனர். இறைவன் காட்டில் திருமணம் செய்வித்த இடமே தற்போது 'திருமணஞ்சேரி' என்று அழைக்கப்படுகிறது.
மதுரையில் இவர்கள் திருமணம் குறித்து உறவினர்களிடையே பிரச்சினை வரவே, வணிகரின் மகள் நடந்ததைக்கூற யாரும் நம்பாமல் பரிகாசம் செய்தனர். இதனால் வணிகரின் மகள் பரிமளேஸ்வரரை நினைத்து வேண்டினாள். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு பிரகாரத்தில் வன்னி மரமும், கிணறும் தோன்றின. (இந்த கிணறு இன்றும் உள்ளது. வன்னி மரம் ஆடி வீதியில் உள்ளது). இதைக்கண்ட ஊர் பெரியவர்கள் இறைவனின் பேரருளை வியந்து அந்த தம்பதிகளை வாழ்த்தினர்.
இரண்டு அம்பாள் சன்னிதி
இவ்வாலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்யும்போது இரண்டு கைகளும் ஒட்டியது. எனவே வேறு ஒரு அம்பாளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அந்த அம்பாளுக்கும் அதேபோல் இரண்டு கைகளும் ஒட்டியது. இதனால் மக்கள் கவலை கொண்டிருந்தபோது பக்தர் ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி, 'என் விருப்பத்தின்படியே இவ்வாறு நடைபெறுகிறது. கவலை கொள்ள வேண்டாம்' என்று கூறி இரண்டு அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட அருள்புரிந்தார். அதன்படி இக்கோவிலில் சுவாமி சன்னிதியின் அருகில் ஒரு அம்பாள் சன்னிதியும், வெளிப்பிரகாரத்தில் இன்னொரு அம்பாள் சன்னிதியும் உள்ளது.