திருச்சானுர் பிரம்மோற்சவம்: சூரிய பிரபை, சந்திர பிரபை வாகன சேவை.. மாட வீதிகளில் குவிந்த பக்தர்கள்
|சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் `வேத நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளினார்.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன சேவை நடந்தது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் `வேத நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய நறுமண பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த சந்திர பிரபை வாகன சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவைகளை கண்குளிர கண்டு தாயாரை தரிசனம் செய்வதற்காக மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வாகன சேவைகளுக்கு முன்னால் கலாசாரக் குழுவினர் நடனம் மற்றும் சங்கீர்த்தனங்களை வழங்கி பக்தர்களை கவர்ந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை பஞ்சமி தீர்த்தம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சிக்காக ரூ.9 கோடி செலவில் புஷ்கரணி நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.