திருச்சானுர் பிரம்மோற்சவம்.. லட்சுமி கடாட்சமாக கஜ வாகனத்தில் வலம் வந்த தாயார்
|திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை, திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் ஐந்தாம் நாளான நேற்று காலையில் பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கஜ வாகன சேவை நேற்று இரவு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பத்மாவதி தாயார் கஜ லட்சுமி கடாட்சமாக அலங்கரிக்கப்பட்ட கஜ வாகனத்தில் அமர்ந்தபடி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கஜ வாகனத்தின் முன் கலைஞர்களின் நடனம், கோலாட்டம், சங்கீர்த்தனங்கள், மேளதாள வாத்தியங்கள் என மாட வீதிகள் களைகட்டின. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசித்து மகிழ்ந்தனர்.
6வது நாளான இன்று, வெண்ணெய் குடங்களுடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.