திருச்சானூர் சுந்தரராஜ சுவாமி அவதார மகோத்சவம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
|விழாவின் இறுதி நாளான நேற்று கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுந்தரராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது.
திருச்சானூர்:
திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுந்தரராஜ சுவாமியின் அவதார மகோத்சவம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. விழா நாட்களில் ஊஞ்சல் சேவை மற்றும் வாகன சேவை நடைபெற்றது.
முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாம் நாளில் அனுமந்த வாகனத்திலும் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் இறுதி நாளான நேற்று கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதன்பின்னர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையடுத்து கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு விழா நிறைவடைந்தது.
விழாவில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.