சர்வ அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
|சர்வ அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்தனர்.
ராமேஸ்வரம்:
இந்திய புனித தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆடி மற்றும் தை அமாவாசை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் ஆனி மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சென்றதுடன் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் தனுஷ்கோடி கடல் பகுதியிலும் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.