திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
|ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
பவுர்ணமி வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.