அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது; விண் அதிர்ந்த ஓம் "நமச்சிவாய' முழக்கம்
|திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா என பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது.
திருவண்னாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா 8-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக இரவு 10 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உலா நடைபெற்றது. சாமி காந்தி சிலை அருகில் வரும்போது வாண வேடிக்கை நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னர் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். சாமி மாட வீதி உலாவின் போது திருவண்ணாமலையில் மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய நமச்சிவாய கோஷம் விண் அதிர்ந்தது.