< Back
ஆன்மிகம்
கருத்துவேறுபாடு நீக்கும் திருவஞ்சைக்களம் ஈசன்
ஆன்மிகம்

கருத்துவேறுபாடு நீக்கும் திருவஞ்சைக்களம் ஈசன்

தினத்தந்தி
|
25 July 2023 5:38 PM IST

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது, திருவஞ்சைக்களம். இந்த திருத்தலத்தில் அமைந்துள்ளது மகாதேவர் கோவில். சிவபெருமானின் தேவார பாடல்கள் இடம்பெற்ற தலங்களில், கேரள மாநிலத்தில் அமைந்த ஒரே ஆலயம் இதுவாகும்.

தேவாரப்பாடல் பெற்ற 274 சிவபெருமான் கோவில்களில், இக்கோவில் 266-வது கோவிலாக இருக்கிறது. சேரநாட்டை ஆட்சி செய்த பெருமாக் கோதையார் என்ற மன்னன், இந்த திருவஞ்சைக்களம் மகாதேவர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவர்தான் பின்னாளில் சேரமான் பெருமான் என்று அழைக்கப்பட்டார். இந்த மன்னர் ஒவ்வொரு நாளும் மகாதேவரை வணங்கும்போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அந்த ஒலியைக் கேட்டபின்பே, மன்னன் தினமும் உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் இறைவனை வழிபடும் வேளையில், சிலம்பொலி கேட்கவில்லை. தன்னுடைய வழிபாட்டில் ஏதோ குறை ஏற்பட்டுவிட்டதாக கருதிய மன்னன், உடைவாளால் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். அப்போது அந்த இடத்தில் பெரும் சிலம்பொலி கேட்டது. அங்கே காட்சியளித்த இறைவன், "மன்னா.. சோழ நாட்டில் இருக்கும் என்னுடைய பக்தனான சுந்தரன் இயற்றிய இனிமையான பாடலில் கொஞ்சம் மெய்மறந்து இருந்துவிட்டேன். அதனால் தான் என்னுடைய சிலம்பொலி உனக்கு கேட்கச் சிறிது காலதாமதமாகிவிட்டது" என்றார். இறைவனின் மனதை மயக்கும் வித்தை தெரிந்த சிவனடியாரைப் பற்றி அறியாமல் இருந்து விட்டோமே என்று வருந்திய சேரமான் பெருமான், சுந்தரரைப் பற்றி சிவபெருமானிடம் கேட்டறிந்தார். பின்னர் அவரைக் காண திருவாரூர் விரைந்தார். சுந்தரர் மற்றும் சேரமான் இருவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இருவருக்குள்ளும் நல்ல நட்பு உண்டானது. சேர மன்னனின் அழைப்பை ஏற்று, சேரநாடு சென்ற சுந்தரர், அங்குள்ள திருவஞ்சைக்களம் இறைவனை தரிசித்தார். பின்னர் சோழ நாடு திரும்பிய சுந்தரர் சோழநாடு, பாண்டியநாடு மற்றும் தொண்டை மண்டலம் ஆகியவற்றில் இருக்கும் பல சிவன் கோவில்களை வழிபட்டு வந்தார்.

இந்த நிலையில் சேரமான் பெருமானை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சுந்தரருக்கு ஏற்பட்டது. இருவரின் நட்பும் உறுதியானதாக அமைந்ததால், அவரை பார்க்கும் ஆவலில் சேரநாடு புறப்பட்டார், சுந்தரர். அவருக்கு சேரமான் பெருமான் சிறந்த வரவேற்பை அளித்தார். அரண்மனைக்கு அழைத்துச் சென்று உரிய ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜையும் செய்தார். பின்னர் சுந்தரரின் விருப்பத்திற்கு ஏற்ப, தன் நாட்டில் உள்ள பல சிவாலயங்களுக்கு சுந்தரரை அழைத்துச் சென்று வழிபட வைத்தார். இறுதியாக சுந்தரர் திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவிலுக்குச் சென்று, இவ்வுலக வாழ்வை துறக்க முடிவு செய்தார். அந்த தலத்தில் நின்று, `இறைவா எனக்கு சிவபதம் கொடுத்து அருள வேண்டும்' என்று வேண்டியபடியே 'தலைக்குக் தலை மாலை' என்னும் பதிகம் பாடினார். அதைக் கேட்ட இறைவன், சுந்தரரை அழைத்து வரும்படி சிவ கணங்களை அனுப்பினார். அவர்களும் ஒரு வெள்ளை யானையில் சுந்தரரை அழைத்துக் கொண்டு கயிலாயம் புறப்பட்டனர்.

அப்போது அரண்மனையில் இருந்த சேரமானுக்கு இந்தச் செய்தி சொல்லப்பட்டது. நண்பனோடு கயிலாயம் செல்ல வேண்டும் என்று நினைத்த சேரமான், திருவஞ்சைக்களம் சென்றார். முன்பு ஒரு முறை சுந்தரரிடம் 'கயிலாயம் செல்ல என்ன வழி?' என்று அவர் கேட்டபோது, சுந்தரர் 'பஞ்சாட்சரம் சொல்வதுதான் வழி' என்று கூறியது சேரமானுக்கு நினைவு வர, தன்னுடைய குதிரையின் மீதேறி அதன் காதில் 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை ஒதி, 'சுந்தரரை தொடர்ந்து செல்' என்று கூறினார். உடனே குதிரை வானில் பறக்கத் தொடங்கியது. சுந்தரரும், சேரமானும் ஒன்றாக கயிலாயம் சென்று சிவபதம் அடைந்தனர். தன்னுடைய வேண்டுதலை கேட்டு வெள்ளை யானையோடு சிவ கணங்களை அனுப்பி வைத்த ஈசனைப் புகழ்ந்து, கயிலாயம் செல்லும் வழியில் 'தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே..' என்ற பதிகத்தைப் பாடினார், சுந்தரர். அந்த பாடல் முடிவடையும் நேரத்தில் அவர் கயிலாயத்தில் இருந்தார். உடனே இறைவன், 'சுந்தரர் கடைசியாக பாடிய பாடலையும் திருவஞ்சைக்களம் கோவிலில் சேர்ப்பிக்கும்படி' வருண பகவானுக்கு உத்தரவிட்டார். அதன்படி வருண பகவான் அந்தப் பாடலை திருவஞ்சைக்களத்தில் சேர்த்ததாக தல வரலாறு சொல்கிறது.

கோவில் அமைப்பு

இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இங்கு அம்மனுக்கு தனிச் சன்னிதி இல்லை. கருவறையினுள் இறைவனுடன் அம்மன் இணைந்து, சதாசிவ (உமாமகேசுவர) நிலையில் கிழக்கு நோக்கியபடி இருக்கிறார். இக்கோவில் இறைவன் மகாதேவர், அஞ்சைக்களத்தீசுவரர் எனும் பெயர்களிலும், அம்மன் 'உமையம்மை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஆலயத்தில் கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராஜர், பசுபதி, சப்தமாதர்கள், ரிஷபம், நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்பட 25-க்கும் மேற்பட்ட தெய்வத் திருமேனிகள் இருக்கின்றன. இக்கோவிலில் சுந்தரரும், சேர மன்னனும் இணைந்திருக்கும் தனிச்சன்னிதி உள்ளது.

இவ்வாலயத்தில் தினமும் மாலை வேளையில் 'தம்பதி பூஜை' நடத்தப்படுகிறது. அதன் பிறகு, 'பள்ளியறை பூஜை' நடைபெறுகிறது. இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடும் தம்பதியர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன்- மனைவி இடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அவை நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. பவுர்ணமி தினத்தில் இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது சிறப்புக்குரியது என்கிறார்கள். பரசுராமர் தன்னுடைய தாயைக் கொன்ற பாவம் நீங்க, இவ்வாலய இறைவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் இருக்கும் நடராசமூர்த்தி சிலையின் கீழுள்ள பீடத்தில் திருவஞ்சைக்களத்து சபாபதி' எனும் தமிழ் எழுத்திலான பெயர் இடம் பெற்றிருக்கிறது. சுந்தரர், சேரமான் நாயனார் ஆகியோருக்கான உற்சவச் சிலைகளும் இருக்கின்றன. கிழக்கு ராஜகோபுர நுழைவுவாசல் கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோவிலுக்குள் செல்வது போலவும், எதிர் சுவரில் கோவிலில் இருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இறைவன் சுந்தரரை அழைத்து வருவதற்காக அனுப்பிய வெள்ளை யானை, சுந்தரரை ஏற்றிக் கொண்டு சென்றதாகச் சொல்லப்படும் மேடை ஒன்று, இங்குள்ள சாலை ஒன்றின் நடுவில் அமைந்திருக்கிறது. இம்மேடையை 'யானை வந்த மேடை' என்று சொல்கின்றனர்.

சுந்தரரும், சேரமானும் கயிலாயம் சென்றது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் அன்று இங்கு விசேஷ பூஜை நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொடுங்கலூர் சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் திருவஞ்சைக்களம் அடையலாம்.

ஒரே நாளில் சிவபதம் பெற்ற நால்வர்

திருவஞ்சைக்களத்தில் இருந்து சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் சென்று, சிவபதம் அடைந்தது, ஒரு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளில் இவர்கள் மட்டுமல்லாது, இன்னும் இரண்டு பேரும் சிவதம் அடைந்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவா், மிழலை நாட்டை ஆண்டு

வந்த குறுநில மன்னர் மிழலைக் குறும்பர். சிவனடியார்களுக்கு உணவு அளித்தும், செல்வங்களைக் கொடுத்தும் தொண்டு புரிந்து வந்தார். தினமும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை விதிப்படி வணங்கியும், பாடியும் சுந்தரரை நினைத்து துதித்து வந்தவர். அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர். சுந்தரர் திருக்கயிலையை அடைந்ததை தனது இருப்பிடத்தில் இருந்தே உணர்ந்து கொண்ட மிழலைக் குறும்பர், 'சுந்தரர் போன பின்பு நான் அவரைப் பிரிந்து வாழமாட்டேன்; யோக நெறியின் மூலம் சிவனடியை அடைவேன்' என்று கூறி, அதன்படியே சிவபதம் அடைந்தார்.

வெள்ளை யானை மீது சுந்தரரும், குதிரையில் சேரமான் பெருமானும் கயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூமியில் விநாயகரை பூஜித்துக் கொண்டிருந்தார், அவ்வையார். அவரிடம் "நீயும் எங்களுடன் கயிலை வா" என்று அழைத்தார், சுந்தரர். அவ்வையாருக்கும் கயிலை செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் விநாயகருக்கு செய்து கொண்டிருந்த பூஜையை விரைவாக முடிக்க எண்ணினார். அதை உணர்ந்து கொண்ட விநாயகப்பெருமான் அசரீரியாக, "அவ்வையே.. எனக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை வழக்கம் போல நிதானமாகவே செய்.. சுந்தரருக்கு முன்பாக நான் உன்னை கயிலையில் கொண்டு போய் சேர்ப்பேன்" என்றார். அதன்பின்னர் விநாயகரை துதித்து, 'சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச்...' என்ற பாடலைப் பாடினார். 72 அடிகளைக் கொண்ட இந்தப் பாடல் 'விநாயகர் அகவல்' என்று அழைக்கப்படுகிறது. அவ்வை வழிபாட்டை முடித்ததும், விநாயகர் தன்னுடைய துதிக்கையில் அவ்வையாரை தூக்கிக் கொண்டு போய் கயிலாயத்தில் விட்டு விட்டார். அதன்பிறகே சுந்தரரும், சேரமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

திருச்செந்தூரில் வெள்ளை யானை உலா

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் கயிலாயம் சென்று சிவபதம் அடைந்தார். அவர் கயிலாயம் செல்ல உதவியது, வெள்ளை யானை ஆகும். மேலும் அவர் கயிலாயம் சென்றதும், சிவபெருமான் சுந்தருக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானை வடிவில் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில், ஆடி மாத சுவாமி நட்சத்திரம் அன்று, வெள்ளை யானை வீதி உலா நடத்தப்படுகிறது. அப்போது கோவில் யானைக்கு, திருநீறு கொண்டு உடல் முழுவதும் பூசி வெள்ளையாக மாற்றுகின்றனர். அந்த வெள்ளை யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரத வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோவிலை அடைவர்.

மேலும் செய்திகள்