< Back
ஆன்மிகம்
தீராத நோய்களை தீர்க்கும் திருத்தினைநகர் ஈசன்
ஆன்மிகம்

தீராத நோய்களை தீர்க்கும் திருத்தினைநகர் ஈசன்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:44 PM IST

உலகில் எங்கும் காணாத அதிசய கோவில் ஒன்று உண்டெனில், அது கடலூர் அருகே உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயமே எனலாம்.

ஆம்... கடந்த மூன்று யுகங்களில்.... நான்கு கோபுரங்கள், மூன்று பெரும் பிரகாரங்களைக் கொண்டு, சுமார் ஐந்து குரோச (12¼ மைல்) சுற்றளவு கொண்ட மிக பிரமாண்டமான கோவிலாக இருந்துள்ளது. இத்திருத்தலம் கிருதயுகம் மற்றும் திரேதாயுகத்தில் 'ஓம்காரபுரம்' என்றும், துவாபரயுகத்தில் 'தேசப்பிரதம்' என்றும், கலியுகத்தின் தொடக்கத்தில் 'ஞானப்பிரதம்' என்றும் அழைக்கப்பட்டு, தற்போது 'திருத்தினை நகர்' என்று போற்றப்படுகின்றது. வழக்கில் இவ்வூர் 'தீர்த்தனகிரி' என்று வழங்கப்படுகின்றது.

'சிவ ரகசியம்' என்னும் நூலில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் மகிமையைப் பற்றி அகத்தியருக்கு முருகப்பெருமான் உபதேசித்துள்ளார். இத்தல ஈசனை வணங்கியே முராசுரன் என்ற அசுரனை திருமால் வதம் செய்தார். அதன் மூலம் திருமாலுக்கு 'முராரி' என்ற பெயர் வந்தது. துர்வாச முனிவரால் சாபம் பெற்ற பிருங்கி மகரிஷி, இத்தலம் வந்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார். கருடன் இப்பெருமானை பூஜித்து, பலம் பெற்று, தன் தாயின் அடிமை தளையை தகர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

ராவணனை வெல்வதற்கு ராமருக்கு உதவியாக இருந்ததுடன், ராமரின் பட்டாபிஷேகத்தையும் கண்டுகளித்த ஜாம்பவான், இத்திருத்தலத்தில் உள்ள ஈசனை வெகு காலம் பூஜித்து, பூரண ஆயுளும், ஞானமும் பெற்றிருக்கிறார். கந்தன், உமாதேவி, நந்திதேவர், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கம், இத்தல மூலவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி - வியாக்ரபாதரின் கோரிக்கைக்கு இணங்கிய இத்தலப் பெருமான், திருநடனக் காட்சியை இங்கு காட்டிய பின்னரே தில்லையில் காட்டியதாகவும் தல வரலாறு சொல்கிறது. அகத்தியருக்கு, தன்னுடைய திருமணக் காட்சியை இந்த திருத்தலத்திலும் ஈசன் காட்டியருளியிருக்கிறார். பெரியான் என்னும் ஏழை விவசாயியின் பேரன்புக்கு பணிந்த சிவபெருமான், அந்த விவசாயி படைத்த தினையமுதை உண்டு, அவருக்கு மோட்சம் அளித்துள்ளார்.

ஒரு சமயம் வங்கதேசத்து அரசனான வீரசேனன், இத்தலத்திற்கு வந்தபோது தோல் நோய் பிடித்திருந்த நாய் ஒன்று, இத்தல தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கி நல்ல நிலையுடன் திரும்பியதைக் கண்டான். இதனால் ஆச்சரியம் அடைந்த அந்த மன்னன், தன்னுடைய காவலாளிகளை கொண்டு குளத்தை தூர் வாரினான். அப்போது கிடைக்கப்பெற்ற நடராஜரை, இந்த தலத்திலேயே நிறுவினான். அப்போது வீரசேனனுக்கு ஒரு அசரீரி ஒலித்தது. 'நான் இங்கு சுயம்புவாக எழுந்தருளி பல காலம் ஆகிவிட்டது. எனவே எனக்கு இங்கே ஒரு ஆலயம் எழுப்பு' என்றது அந்தக் குரல். அதன்படியே சிவபெருமானுக்கு ஆலயத்தை எழுப்பினான், மன்னன் வீரசேனன்.

நடுநாட்டின் தேவார திருத்தலங்களில் 22-வது தலமாக இத்தலம் திகழ்கிறது. அதோடு, திருஞானசம்பந்தர், அப்பர், சேக்கிழார், பட்டினத்தார் ஆகியோரும் இத்தல இறைவனைப் பற்றி பாடியுள்ளனர். இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் படரும் அதிசயம் நிகழ்கிறது.

ஆலய ராஜகோபுரத்திற்கு வெளியே, அன்னை கருந்தடங்கண்ணி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த அன்னைக்கு நீலாயதாட்சி, பிரணவபுரீஸ்வரி, ஒப்பிலாநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. விசாலமான ராஜகோபுரம். அதை கடந்து உள்ளே சென்றால், கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி உள்ளது. அதனுள் 4 யுகங்களாக அருள்புரிந்து வருகிறார், சிவக்கொழுந்தீஸ்வரர். இவர் சிவாங்குரேஸ்வரர், நந்தீஸ்வரர், பிரணவ புரீஸ்வரர் போன்ற பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

உற்சவமூர்த்தியான நடராஜர் திருவடியின் கீழ் பிரம்மா பஞ்சமுக வாத்தியமும், திருமால் பஞ்சசானிய சங்கும் முழங்குகின்றனர். இந்த அபூர்வ கோலத்தை இங்கு மட்டுமே காண முடியும். யோகாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அதிசயமான தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசனம் செய்யலாம். தல வரலாற்று புடைப்புச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. துர்க்கை அஷ்டபுஜங்களுடன் நின்ற கோலத்தில் பேரருள் புரிகிறார். ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட ஜாம்பவான் தீர்த்தம், ஆலயத்திற்கு இடப்புறம் அமைந்துள்ளது. அதோடு அம்பிகை உண்டாக்கிய கவுரி தீர்த்தம், கருடன் ஏற்படுத்திய பெருமாள் ஏரி, தேவதீர்த்தம் என்னும் கடல் போன்றவையும் இத்தல தீர்த்தங்களாக விளங்குகின்றன.

தினமும் ஒரு பூ பூக்கும் - காய் காய்க்கும் சரக்கொன்றை மரம், இவ்வாலயத்தின் தல விருட்சமாக திகழ்கிறது. கல்வெட்டில் இவ்வூர் 'விருதராச பயங்கர வளநாட்டு மேற்கானாட்டு ஜெயங்கொண்ட சதுர்வேதிமங்கலத்து திருத்தினை நகர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக 1949 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இவ்வாலயத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

தினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தில், வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழாவும், அனுஷத்தில் ஜாம்பவான் தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், மாசி மகத்தில் தேவதீர்த்தம் என்னும் கடலில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது. இவ்வாலய இறைவனுக்கு தினையமுது படைத்து வழிபடுபவர்களின், தீராத வினைகளையும், நோய்களையும் இத்தல ஈசன் தீர்த்தருள்கிறார்.

அமைவிடம்

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், ஆலப்பாக்கம்- புதுச்சத்திரம் இடையே உள்ளது மேட்டுப்பாளையம். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, தீர்த்தனகிரி. கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

- பழங்காமூர் மோ.கணேஷ்

மேலும் செய்திகள்