< Back
ஆன்மிகம்
முக்தி அளிக்கும் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர்
ஆன்மிகம்

முக்தி அளிக்கும் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர்

தினத்தந்தி
|
25 Aug 2022 3:48 PM IST

விருத்தபுரீஸ்வரர் கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் மூடியே இருக்கிறது. இதற்கான வரலாற்றைப் பார்ப்போம்.

சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித்திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான். அதைக்கண்ட முனிவர், "உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்" என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான். அதற்கு முனிவர், "வஜ்ரவனம் என்ற திருப்புனவாயல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்" என்றார்.

தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான். அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு, அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.

தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், "உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு" என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார். ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும். காளியின் உருவமான சூலத்தை நேரடியாக பக்தர்கள் தரிசிக்க கூடாதாம். இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலில் அமைந்துள்ளது, விருத்தபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவானதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால், படைக்கும் தொழிலை பிரம்மதேவன் இழக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து படைப்புத் தொழிலை மீண்டும் பெற வழிபாடு செய்து வந்தார். லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு 'பிரம்ம தீர்த்தம்' என்று பெயர். இந்த தீர்த்த குளம் இன்றளவும் இந்தக் கோவில் அருகே காணப்படுகிறது.

பிரம்மன் நான்கு முகம் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவனின் முகத்தை உருவாக்கி வழிபட்டார். இந்த லிங்கத்திற்கு பெயர் 'சதுர்முக லிங்கம்' ஆகும். இந்த லிங்கமும் இங்கு இருக்கிறது. 2-ம் சுந்தரபாண்டியன் எனும் மன்னரால் பிற்காலத்தில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கோவில் கருவறையில் லிங்கம் 9 அடி உயரத்திலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. இவர் 'விருத்தபுரீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 'விருத்தம்' என்றால் 'பழமை' என்று பொருளாகும். இதனால் 'பழம்பதிநாதர்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. லிங்கத்திற்கு 3 முழத்திலும், ஆவுடையாருக்கு 30 முழத்திலும் வேட்டி கட்டப்படுகிறது. கேட்டதைக் கொடுக்கும் சிவபெருமானுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேட்டியும், துண்டும் செலுத்துவது உண்டு. வேட்டியும், துண்டும் பிரத்யேகமாக நெய்து பக்தர்கள் அளிப்பார்கள். அம்பாள் பெரியநாயகி எனும் பிரகந்நாயகி, சிவனுக்கு இடப் புறம் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வழிபாடு நடத்தினால் தேவார பாடல்கள் பாடப்பெற்ற பாண்டிய நாட்டின் 14 சிவன் கோவில்களிலும் வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

இந்த ஆலய இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு, மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். அடுத்த பிறவி இன்றி, முக்தி அளிக்கக்கூடிய தலமாக இது விளங்குகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கி உடனடி பலன் கிடைக்கும். இக்கோவிலில் நான்கு யுகத்தை குறிக்கும் வகையில், நான்கு தல விருட்சங்கள் உள்ளன. கிருதயுகத்தில் சதுர கள்ளியும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்த மரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது.

இங்கு ஐந்து பிள்ளையார் சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஒரு பிள்ளையார் எனவும், நடுவில் மூலவ பெரிய பிள்ளையார் எனவும் கூறப்படுகிறது. 'ஆகண்டல விநாயகர்' என்ற பெயரில் தனிச் சன்னிதியிலும் விநாயகர் வீற்றிருக்கிறார். அந்த சன்னிதியில் சுரங்கப்பாதை அமைத்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீர்த்த தாண்டதானம் எனும் ஊரில் இருந்து சுந்தரபாண்டிய மன்னர் வந்து வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சுரங்கப்பாதை இருந்த இடம் தற்போது மூடப்பட்டுள்ளது.

சிவன் கோவிலில் பொதுவாக ஒரு சண்டிகேஸ்வரர் சன்னிதி இருக்கும். ஆனால் இங்கு ஒரே சன்னிதியில் 2 சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். அம்பாள் சன்னிதி அருகிலும் சண்டிகேஸ்வரி தேவி இருக்கிறார். வேறு எங்கும் இல்லாத வகையில் இக்கோவிலின் ராஜகோபுரமும், மூல வரின் விமான கோபுரமும் பெரியஅளவில் காணப்படுகிறது. இதில் விமான கோபுரம், ராஜகோபுரத்தை விட அழகுடன் காணப்படுகிறது. கோவிலில் தட்சிணாமூர்த்தி வேறு எங்கும் இல்லாத வகையில் அமர்ந்த நிலையில் உள்ளார். சூரியன், சந்திரன், பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளும், மூலவரின் பின்பகுதியில் பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் மாதாந்திர உற்சவங்கள், கார்த்திகை சோமவாரத்தில் 1,008 சங்காபிஷேகம், வைகாசியில் தேரோட்டத்துடன் 11 நாள் திருவிழா நடக்கிறது. வைகாசி விசாகத்தன்று மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பாகும். கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

கவுதமரின் சாபம் பெற்ற இந்திரனும், படைப்பு தொழிலை மறந்த நான்முகனும், தக்கனின் சாபத்தால் தன் கலையிழந்த சந்திரனும், சிவத்துரோகம் செய்த வாயுபகவானும் இத்தலம் வந்து வழிபட்டு நற்பேறு பெற்றார்கள். ஆதிசேடன், விநாயகர், அகத்தியர், வசிஷ்ட முனிவர், இந்திரனது வெள்ளை யானை, சவுந்திரபாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலமாக இது இருக்கிறது.

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாடானையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், ஆவுடையார் கோவிலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலும் திருப்புனவாசல் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்