< Back
ஆன்மிகம்
குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மாசிலாமணீஸ்வரர்
ஆன்மிகம்

குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மாசிலாமணீஸ்வரர்

தினத்தந்தி
|
8 Sept 2023 8:15 PM IST

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது, வட திருமுல்லைவாயில். சென்னை அம்பத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவாலயத்துக்கு 'வட திருமுல்லைவாயில்' என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவதலம் 'தென் திருமுல்லைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது, வட திருமுல்லைவாயில். புராதன சிறப்புமிக்க இந்த ஆலய இறைவன் திருநாமம் மாசிலாமணீஸ்வரர். இறைவி பெயர் கொடியுடைய நாயகி. சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது. இதனால் சிவனை குளிர வைக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தன காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார். அந்த நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப் பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரச லிங்கத்தை தனி சன்னிதியில் வைத்து பூஜை செய்கிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடனும், மன நிம்மதியுடனும் வாழ வழிபட வேண்டிய தலம் என்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு.

சென்னை அரக்கோணம் புறநகர் ரெயில் பாதையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.

தல வரலாறு

காஞ்சிபுரத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தார் தொண்டைமான் மன்னர். அதே வேளையில் புழல் கோட்டையில் ஓணன், காந்தன் என்ற அசுரர்கள், எருக்க தூண்களும், வெண்கல கதவும் கொண்டு ஒரு அரண் அமைத்து ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு மக்களை பல வகையிலும் துன்புறுத்தி வந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய மக்கள் தொண்டமானிடம் வந்து முறையிட்டனர். அதைக் கேட்ட மன்னர் வெகுண்டெழுந்து பெரும் படையுடன் அங்கு சென்றார். 'கோலம்பேடு' என்ற கிராமத்தை கடக்கும் போது இரவு ஆனதால், அங்கேயே தங்கினார்.

அப்போது தூரத்தில் இருந்து வெண்கல மணி ஓசை கேட்டது. அது சிவாலயத்தில் இருந்து ஒலிக்கும் மணி என்று மன்னர் நினைத்தார். அருகில் இருந்த அமைச்சர்கள், அது அரக்கர்கள் மாளிகையில் இருந்து வருகிறது என்று கூறினர். அரக்கர்களின் அடாத செயலுக்கு முடிவுகட்டி, அவர்களை அடக்கும் நோக்கத்தோடு மன்னர் படையுடன் விரைந்து சென்றார். தொண்டைமான் படையுடன் வருவதைக் கண்ட அரக்கர்கள், தாங்களும் படையை திரட்டி வந்து போர் செய்தனர். அரக்கர்களின் தெய்வமான பைரவரின் வரத்தால் ஒரு பூதத்தின் உதவியால் அவர்கள் தொண்டமான் படையை விரட்டி அடித்தனர். இதற்கு மேல் போர் செய்ய முடியாது என்று தீர்மானித்த மன்னன் படையுடன் பாசறைக்கு திரும்பினான்.

வரும் வழியில், மன்னன் ஏறி வந்த யானையின் காலில் முல்லைக்கொடிகள் பின்னிக்கொண்டன. யானை கால்களை எடுக்க முடியாமல் திணறியது. இதைப் பார்த்த மன்னன் யானையின் மீது அமர்ந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினார். திடீரென்று அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையில் இருந்து இறங்கி வந்து அந்த இடத்தைப் பார்த்தான். புதர்கள் வெட்டப்பட்டு இருந்த இடத்தில் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதிலிருந்து ரத்தம் வழிவதையும் கண்டு திகைத்தான். பின்னர் தனது வாளால் தலையை கொய்து உயிரைவிடத் துணிந்தான்.

அப்போது இறைவன் காளை வாகனத்தில் காட்சியளித்து, "மன்னா! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசில்லா மணி கவலைப்படாதே! நந்தியை உனக்கு துணையாக அனுப்பி வைக்கிறேன், வெற்றி பெறுவீர்!" என அருள்புரிந்தார். அரசனும் அரக்கர்களுடன் மறுபடியும் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையை நினைத்து போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினார். அசுரர்களின் அரணில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளருக்கு தூண்களையும், தான் உருவாக்கிய சிவாலயத்தில் இறைவன் கருவறை முன் பொருத்தி வைத்தார். அந்த இடமே திருமுல்லைவாயில் ஆகும்.

அந்த இடத்தில் பெருமானுக்கு கோவில் அமைத்து கருவறை மணிமண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றை அமைத்தார். நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்தார் தேவாரப் பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர். இதை தமது தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சுயம்பு லிங்கம் ஆலயத்தின் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். உயரமான லிங்கத்தைச் சுற்றி சதுர பீட ஆவுடையார் உள்ளது. லிங்கத்தின் மேல் புறம் வெட்டப்பட்ட வடு உள்ளது. வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்படுவதால் லிங்கப் பகுதிக்கு அபிஷேகங்கள் கிடையாது. ஆவுடையாருக்கு தான் வென்னீர்அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் என்பதால் லிங்கத்தின் மீது சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீது மீண்டும் சந்தனம் சாத்தப்படும். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சந்தன காப்பு முழுவதுமாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தன காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத் திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவன் மீது சந்தன காப்பு இருந்து கொண்டே இருக்கும். அம்பாள் சுவாமிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.

பொதுவாக சிவாலயங்களில் மூலவருக்கு நேராக நந்தி சிலை இருக்கும். தலபுராணபடி இங்குள்ள நந்தி தொண்டைமானுக்கு உதவி செய்வதற்காக அசுரர்களை எதிர்த்து போர் புரிய சென்றதால் நந்தி, சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் போன்ற நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நந்திக்கு பூஜை செய்து, நந்திக்கு சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பலம் தரும் பல்லி

கோவில் வெளிப்பிரகாரத்தில் சுற்றி வரும்போது பிரகார சுவற்றில் பல்லி உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பல்லிகள் தங்கள் இழந்த வாலை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் தன்மை பெற்றவை. அதே போல் உடல் வலிமை குன்றியவர்கள், எதிரிகள் சூழ்ச்சியால் பலம் இழந்தவர்கள், இந்த பல்லியை தரிசனம் செய்தால் புதுப்பலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் செய்திகள்