வாரம் ஒரு திருமந்திரம்
|திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
மூவாயிரம் பாடல்களால், சிவ நெறியை பறைசாற்றியவர் திருமூலர். இவரது அந்த மூவாயிரம் பாடல்களும், 'திருமந்திரம்' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
கரந்தும் கரந்திலன் கண்ணுக்குத் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
வரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
விளக்கம்:- சிவபெருமான் உயிர்களுக்கு வேண்டும்போது காட்சி தருபவர். அவர் கண்ணுக்குப் புலப்படாது மறைந்திருந்தாலும், உயிர்களின் பொருட்டு வெளிப்பட்டுத் தோன்றவும் செய்வார். அவர் பசுமை மிக்க பொன் போன்ற நிறம் கொண்டவர். படர்ந்து விரிந்த சடைமுடி தரித்தவர். அவரைப் பெரிய தவஞானிகள் அல்லாமல், பிறரால் அணுக இயலாது. வெண்மதி சூடிய அவரை விரைந்து தொழுதல் நல்லது.