< Back
ஆன்மிகம்
சிவகதி அருளும் திருச்சுழி திருமேனிநாதர்
ஆன்மிகம்

சிவகதி அருளும் திருச்சுழி திருமேனிநாதர்

தினத்தந்தி
|
11 Oct 2022 6:55 AM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற இடத்தில் அமைந்துள்ளது, துணைமாலையம்மை உடனாய திருமேனிநாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 202-வது ஆலயமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 12-வது தலமாகவும் விளங்குகிறது.

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி சன்னிதியில் உள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகிறது.

இங்கு அருளும் அம்பாள், மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே காட்சி தருகிறார். அம்பாள் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடது கால் போன்றவற்றை சற்றே சாய்த்து நடன அமைப்பில் தரிசனம் தருகிறாள். அம்பாள் சன்னிதிக்குள், அம்பாளுக்கு எதிரே ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டுள்ளது.

ரமண மகரிஷி அவதரித்த தலம் இதுவாகும். அவர் தென்னிந்திய யாத்திரையின் போது, இந்த தலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

இவ்வாலயத்தில் நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷூ, கார்த்திகை சோமவாரம், ஆடித் தபசு, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம், தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெறும் திருநிகழ்வுகள் ஆகும்.

இத்தல இறைவனை சிவராத்திரி அன்று, ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்ட, அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவர் இங்கு திருமணக் கோலத்தில் அருள்கிறார். எனவே இங்கு வந்து திருமணம் செய்து கொள்வதை மக்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது.

மூலவர்: திருமேனிநாதர் (வேறுபெயர்கள்: சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோல நாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர்)

அம்பாள்: துணைமாலையம்மை (வேறுபெயர்கள்: சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை)

தலவிருட்சம்: அரச மரம், புன்னை மரம்.

தல தீர்த்தம்: பாகவரி நதி (குண்டாறு), கவ்வைக் கடல் தீர்த்தம்

எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம், இங்கின்றி வேறு எங்கும் தீராது.

இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் இந்த ஆலயத்தில் இருக்கும் சிறப்பாகும். அப்படி இறந்தவர்களுக்காக அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றினால், இறந்தவர்களின் பாவங்கள் களையப்பட்டு, அவா்கள் 21 பிறவியைக் கடந்து சிவகதி அடைவார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது திருச்சுழி. விருதுநகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் உள்ளது.

மேலும் செய்திகள்