< Back
ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்
திண்டுக்கல்
ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
12 Jun 2022 9:40 PM IST

வைகாசி விசாக திருவிழாவையொட்டி, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

வைகாசி விசாக திருவிழா

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'வசந்த உற்சவம்' என்று அழைக்கப்படும் இத்திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6-ம் நாளான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வைகாசி விசாக நாளான திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் சரண கோஷம்

முன்னதாக, திருத்தேர் ஏற்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருத்தேரில் எழுந்தருளினர்.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றதை அடுத்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து சரண கோஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது.

முட்டி தள்ளிய யானை

முன்னதாக திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரானது கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி நிலை வந்து சேர்ந்தது.

இதற்கிடையே ரதவீதிகளில் உள்ள மேடான பகுதிகளில் தேர் வந்தபோது, கோவில் யானை கஸ்தூரி தனது துதிக்கையால் முட்டி தள்ளி தேரை நகர்த்தியது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷங்களை எழுப்பினர். பக்தர்களின் சரண கோஷத்துக்கு மத்தியில் தேரோட்டம் நடந்தது.

பெரிய தந்தப்பல்லக்கு

தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்