திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா
|திருத்தணி முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இரவு முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று 2-ம் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகதகல், தங்க கீரிடம், வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
தெப்பத் திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா, கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். மலைக்கோவிலுக்கு செல்ல நேற்று அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டது.
மாலை 7 மணிக்கு நடைப்பெற்ற 2-ம் நாள் தெப்பத்திருவிழாவில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் சமேதராய் மலையடிவராத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத் திருவிழா நடைப்பெறும் சரவணப்பொய்கை திருக்குளத்தை சுற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடைப்பெற்றது.
தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், கோவில் துணை ஆணையர் விஜயா, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.