திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்
|திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சிவகாசி,
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி அங்குரர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ந்தேதி சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடை பெற்றது. 7-ந்தேதி காலை கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
இரவு சூரிய பிரபை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் இரவு தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள், செங்கமலத் தாயாருடன் தினமும் ஒரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நிலையில் ஆனி பிரமேற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மண்டல தலைவர்கள் குருசாமி, அழகுமயில் பொன்சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்தனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தையொட்டி சிவகாசி-விருதுநகர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு கேசரி, அன்னதானம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.