பிரமாண்டமான விநாயகர்
|கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின், தெற்கு பெங்களூரு பகுதியில் உள்ளது, பசவனகுடி என்ற ஊர். இங்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சுயம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இந்த விநாயகரை, 'தொட்ட கணபதி' என்று அழைக்கிறார்கள். கன்னட மொழியில் 'தோடா' என்பதற்கு, 'பெரிய' என்று பொருள். அந்த 'தோடா' என்பதே 'தொட்ட' என்று மருவியதாக சொல்கிறார்கள். இந்த விநாயகரை 'சக்தி கணபதி', 'சத்திய கணபதி' என்றும் அழைப்பார்கள்.
இந்த ஆலயம் பெங்களூருவை நிர்மாணித்த முதலாம் கெம்பேகவுடா என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் ஒரு இடத்தில் நிறைய பாறைகள் இருந்ததையும், அந்தப் பாறைகளில், சில வடிவங்கள் வரையப்பட்டிருப்பதையும் கவனித்தார். அப்படி ஒரு பெரிய பாறையில் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை மையமாக வைத்து அந்த பாறையை, விநாயகர் சிலையாக மாற்றும்படி உத்தரவிட்டார். அவ்வாறு உருவானதே இந்த விநாயகர் சிலையும், அதன்பின் ஏற்படுத்தப்பட்ட ஆலயமும் என்கிறார்கள்.
ஒற்றைக் கல்லில் உருவான இந்த ஆலயத்தில் அருளும் விநாயகப் பெருமான், 18 அடி உயரத்திலும், 16 அடி அகலத்திலும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இந்த விநாயகர், திருவிழா நேரங்களில் விதவிதமான அலங்காரத்தில் காட்சி யளிப்பார். 100 கிலோ வெண்ணெய்யை, இந்த விநாயகர் சிலை முழுவதும் பூசி அலங்கரிப்பார்கள். அதோடு திராட்சை மற்றும் பாதாம் கொண்டு, வெண்ணெய் பூசப்பட்ட உடலை கவர்ந்திழுக்கும் வகையில் அலங்காரம் செய்வர். கருவறை வெப்பம் நிறைந்து காணப்பட்டாலும் கூட, வெண்ணெய் அலங்காரம் உருகுவதில்லை என்பது அதிசயம் தான். அதே போல் சந்தையில் கிடைக்கும் அனைத்து வகையான காய்கறிகளைக் கொண்டும், விநாயகரை அலங்காரம் செய்வார்கள்.