சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி..!
|மண்டல பூஜையின்போது சபரிமலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலை அய்யப்பனுக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.
அதன்படி, சபரிமலையில் 27- ந் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி தங்க அங்கி நேற்று சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கி வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.
26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வந்து சேரும் தங்க அங்கி மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் 18- ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி மகேஷ் ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். தொடர்ந்து 18- ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெறும். அதன்பின்பு வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
மறுநாள் (27-ந் தேதி) மண்டல பூஜை தினத்தில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளும், 5 மணிக்கு களபாபிஷேகமும் நடைபெறும். காலை 10.30 மணிக்கு தங்க அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி 26- ந் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தங்க அங்கி அணிவித்து நடைபெறும் தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
27-ந் தேதி நடை அடைக்கப்பட்ட பின்பு 3 நாள் ஓய்வுக்கு பிறகு மகர விளக்கையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30- ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 15- ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜை நெருங்குவதையொட்டி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.