< Back
ஆன்மிகம்
பயமில்லாத வாழ்வு தரும் தேவன்
ஆன்மிகம்

பயமில்லாத வாழ்வு தரும் தேவன்

தினத்தந்தி
|
9 May 2023 7:07 PM IST

கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தார்களோ அவர்கள் எல்லோரும் பூமியிலே பயமின்றி வாழக் கடவுள் கிருபை செய்தார்.

பயம் மிகவும் கொடியது. பயப்படாத மனிதனே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காரணத்தால் பயந்துகொண்டுதான் இருக்கிறான்.பயம், மனிதனை இரண்டு விதத்தில் ஆட்கொள்கிறது. முதலாவதாக காரணத்தோடு பயப்படுவது. உதாரணமாக ஒரு வியாதி வந்து விட்டால் மரித்துவிடுவோமோ? என்ற பயம். தேர்வு எழுதும் சிறுபிள்ளைகள் கூட தோல்வியடைந்து விடுவோமோ? என பயப்படுவார்கள்.

இரண்டாவதாக காரணமில்லாமல் பயப்படுவது. இவ்வகை பயம், நாம் எதற்காக பயப்படுகிறோம்? எனத் தெரியாமலேயே பயப்படுவார்கள்.வேதம் சொல்லுகிறது, 'மெஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக் கொள். அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய். உன் கால் இடறாது. நீ படுத்துக் கொள்ளும் போது நித்திரை இன்பமாயிருக்கும்'. (நீதிமொழிகள் 3:21.23,24).

தூக்கத்தில் கூட பயப்படுகிறவர்கள் அநேகம் பேர். பயமின்றி நடக்க மெய்யான ஞானத்தையும், நல்லாலோசனையையும் காத்துக்கொள்ள வேண்டும்.'ஆண்டவருக்கு பயப்படுவதே மெஞ்ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி'. (யோபு 28:28).

'கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்' (நீதிமொழிகள் 1:7).ஞானத்தின் ஆரம்ப நிலையே கர்த்தருக்கு பயப்படுதல் தான். கடவுளுக்கு பயப்பட்டால் மற்ற எல்லாவிதமான பயமும் நம்மை விட்டுப்போகும்.

'என் வருத்தங்களைப் பற்றி பயமற்றவனாயிருக்கிறேன் என்று யோபு சொல்கிறார்' (யோபு:9.28).'ஆபிரகாம், யோசேப்பு ஆகியோர் தேவனுக்கு பயப்படுகிறவர்களாக காணப்பட்டார்கள்'. (ஆதியாகமம் 22:12, 42:18).

இதுபோன்று யாரெல்லாம் கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தார்களோ அவர்கள் எல்லோரும் பூமியிலே பயமின்றி வாழக் கடவுள் கிருபை செய்தார்.'கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திட நம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்'. (நீதி 14:26)

அடுத்ததாக பயமில்லாமல் வாழ கர்த்தரை நாம் நம்முடைய பெலனாக கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு காரியமானாலும் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும்.'இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு கானான் தேசத்திற்கு செல்லும் வழியில் முன்னே செங்கடல், பின்னே எகிப்தியர் ரதங்களோடும் குதிரைகளோடும் இஸ்ரவேல் மக்களை அடிமைப்படுத்த வந்து கொண்டிருந்தனர்'. (யாத்திராகமம் 14:10)

இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தார்கள். அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள். கர்த்தர் செங்கடலை இரண்டாகப் பிளந்து இஸ்ரவேலர் கால் நனையாமல் கடந்து போகச் செய்தார். எகிப்தியரை அதே செங்கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.'கர்த்தரை நோக்கி கூப்பிட்ட இஸ்ரவேல் புத்திரருக்கு ஆதரவாக கர்த்தர் துணை நின்று எகிப்தியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்'. (யாத்திராகமம் 14:25).

நாமும் பயம் வரும் போது கர்த்தரை நோக்கி ஜெபிக்க வேண்டும். சிலர் காரணமில்லாமல் பயப்படுவார்கள். அவர்களது உள்ளம் எப்போதும் அமைதியை இழந்து கலக்கத்தோடு காணப்படும்.

'பயத்தை போக்க பல காரியங்களை செய்வர். ஆனால் உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி'. (சங்கீதம் 119:174) என வசனம் கூறுகிறது.

வேத வசனங்களை வாசிக்க வாசிக்க பயம் என்ற இருள் உள்ளத்தை விட்டு வெளியேறி உள்ளம் மகிழ்ச்சியால் களிகூரும்.'தாவீது கூறுகிறார்: உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்தில் அழிந்து போயிருப்பேன்' (சங்119:92) என்று.

நள்ளிரவு நேரம் அடர்ந்த காட்டிற்குள் தன் தந்தையின் தோளில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை எதற்கும் பயப்படாது. அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் தன் தந்தையை அந்த குழந்தை முழுவதுமாக நம்பும். அதுபோல தாயின் கருவில் உருவாகும் முன்னே நம்மை அறிந்து உருவாக்கி, பாதுகாத்த ரட்சகர் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராலும் நமக்கு கொடுக்க முடியாத சமாதானத்தை கொடுப்பவர் இயேசு மட்டுமே.

'சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக' (யோவான் 14:27). 'பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்' (1 யோவான் 4:18).

எனவே கர்த்தருக்கு பயந்து அவரை அன்பு செய்து நம் உள்ளத்தில் அவரை ஏற்றுக்கொண்டு, மனமகிழ்ச்சி தரும் வேதத்தை தியானித்து பயமின்றி வாழ்வோம். 'பேதுரு, இயேசு கடலின் மேல் நடந்து வருகிறதைக் கண்டு தானும் நடக்க வேண்டும் என விரும்பி இயேசுவிடம் அனுமதி கேட்டான். அனுமதி கிடைத்தவுடன் பேதுரு படகை விட்டு இறங்கி இயேசுவை பார்த்து கடலின் மேல் நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கு பின் அலைகளைப் பார்த்து பயப்பட்ட போது பேதுரு மூழ்க ஆரம்பித்தான்'. (மத்தேயு 14:28-30)

உலகமாகிய கடலில் பல வித பிரச்சினைகளை கண்டு பயந்து தினம் தினம் மூழ்கும் மனிதனே, இயேசுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு பெரிய (பிரச்சினை என்ற) கடலின் மேல் நடந்தாலும் நீ மூழ்கிப்போக மாட்டாய்.

பயத்திலிருந்து விடுதலை பெறவும், பயமில்லாமல் வாழவும், சமாதான காரணராகிய இயேசுவுக்கு உங்கள் உள்ளத்தைக் கொடுங்கள். இயேசு பயமின்றி வாழ கிருபையை உங்களுக்கு தருவாராக.

மேலும் செய்திகள்