< Back
ஆன்மிகம்
தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே
ஆன்மிகம்

தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே

தினத்தந்தி
|
4 April 2023 5:55 PM IST

நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

புனித ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக, அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுபடுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப்பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிகஅதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தானதர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது. ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக்காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கிவிட்டார்கள். நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும் தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க இப்தார் உணவை கொண்டு வரும்படி வேண்டினார்கள்.

பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக்காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று இவ்வாறு கேட்டாள். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இந்த விஷயத்தை முன்னே நீ எனக்கு ஞாபகப்படுத்தியிருந்தால், நான் அவ்வாறு செய்திருப்பேனே' என்று கூறினார்கள். 'தனக்குப் போக தானம்' என்பதையும் தாண்டி, தனக்கே ஒன்று கூட வைக்காமல் பிறருக்கே அனைத்தையும் வாரி வழங்கிய கொடை வள்ளல் தான் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்.

நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித்தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், ரமலான் வந்துவிட்டால் ஏழைகள் இல்லாமல் நோன்பு திறக்க மாட்டார்கள். அவர்கள் நோன்பு நோற்க நாடி உணவு உண்ண ஆரம்பிக்கும் போது யாசகர் யாராவது வந்து உணவு கேட்டால், அவர் தம் உணவின் பங்கை வழங்கிடுவார். வந்து பார்த்தால் மீதி உணவை அவரின் குடும்பத்தினர் உண்டு முடித்து விடுவார்கள். இவ்வாறே அவர் ஸஹர் உணவை சாப்பிடாமல் நோன்பு நோற்பார். இந்த நல்லசெயல் அவரிடம் தொடர்ந்து நடக்கும்.

'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)

இந்த சமுதாயத்தில் வாழ்ந்து சென்ற முன்னோர்களில் நல்லவர்கள் அன்னதானம் வழங்குவதின் மீதும், நோன்பாளிகள் நோன்பு திறக்க இப்தார் உணவு வழங்குவதின் மீதும் பேராசை கொண்டிருந்தனர். மற்ற வணக்க வழிபாடுகளை விட இந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலை வழங்கி வந்தனர். இப்னு உமர் (ரலி), இமாம் அஹமத் (ரஹ்), இமாம் தாவூத் தாயீ (ரஹ்), மாலிக் பின் தீனார் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் இப்தார் உணவை பிறருக்கு வழங்குவதில் தங்களைவிட பிறரை முற்படுத்தினர்.

ஹஸன் பஸரீ (ரஹ்), அப்துல்லாஹ்பின் முபாரக் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் தமது சகோதரர்களுக்கு உணவு வழங்கி அவர்களை அமரவைத்து, அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களின் உள்ளங்களை ஆறுதல்படுத்துவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். நாமும் புனித ரமலானில் ஏழை நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு, இப்தார் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

மேலும் செய்திகள்