< Back
ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

தினத்தந்தி
|
19 Jan 2024 9:32 AM IST

முக்கிய நிகழ்வாக வருகிற 24-ந் தேதி முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், முதல் நாளான இன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவின் 6-ம் நாளான 24-ந் தேதி (புதன்கிழமை) மாலை 7.30 மணிக்குமேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

அடுத்த நாள் 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 28-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.


மேலும் செய்திகள்