< Back
ஆன்மிகம்
முன்னோர்களின் ஆசியை நல்கும் தை அமாவாசை
ஆன்மிகம்

முன்னோர்களின் ஆசியை நல்கும் 'தை அமாவாசை'

தினத்தந்தி
|
20 Jan 2023 4:18 PM IST

பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார்.

முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில், ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு படையல் போட்டு, காகத்திற்கு படைத்து சாப்பிடுவர். இது நடைமுறையில் இருந்தாலும் அவற்றில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக சொல்லப்படுகிறது.

தை அமாவாசை அன்று பித்ரு லோகம் புறப்படும் நம் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.

இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா். அதே போல் தனக்காக

உயிர்நீர்த்த ஜடாயு என்ற கழுகு அரசனுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்து தர்ப்பணம் கொடுத்தார் என்கிறது புராணங்கள்.

செய்யக்கூடியவை

தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்

களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.

மேலும் செய்திகள்