< Back
ஆன்மிகம்
முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை
ஆன்மிகம்

முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை

தினத்தந்தி
|
6 Feb 2024 12:10 PM IST

கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.

அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து "உனக்கு என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டனர்.

அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் இடையே இருந்த மாவசு என்பவரைப் பார்த்து 'இவர் என்ன கம்பீர வடிவம் கொண்டவராக இருக்கிறார். இது போன்று ஒரு கணவன் தனக்கு அமையக்கூடாதா?' என ஒரு கணம் சிந்தித்தாள். அவளது எண்ணத்தைத் தெரிந்து கொண்ட மாவசு, "நீ தேவலோக மங்கை. ஆனால் சாதாரணமான மனிதப் பிறவிபோல் நடந்துகொண்டாய். எனவே நீ பூலோகத்திற்குச் சென்று பெண்ணாய் பிறப்பாய்" என்று சாபம் கொடுத்தார்.

தன் தவறை எண்ணி வருந்திய அந்த தேவலோகப் பெண், 'இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் இல்லையா?" எனக் கேட்க, "நீ தொடர்ந்து தவம் செய். அந்தரிட்சத்தில் (ஆகாயமும் இல்லாமல் பூமியில் இல்லாமல் இடையில் அமைந்த பகுதி) நீ செய்யும் தவத்தால் உன்னுடைய சாபம் விலகும்" என்று கூறினார், மாவசு.

இதையடுத்து மீண்டும் சில வருடங்கள், அந்த தேவ லோகப் பெண் தவம் செய்தார். அதன்பின்னர் அவளுக்கு மீண்டும் பித்ரு தேவர்கள் காட்சி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து, "உன் பாவங்களும், சாபங்களும் விலகின. இதன் பயனாக நீ துவாபர யுகத்தில் மச்சகந்தி என்னும் பெயரோடு, ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய், பராசுரர் என்னும் மகா முனிவரால் நீ, வியாசர் என்ற சிறப்புமிக்க மகனை பெற்றெடுப்பாய். பின்னர் சந்தனு என்ற மகாராஜாவின் மகாராணியாக மாறி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கடைசி காலத்தில் நீ புண்ணிய நதியாக உருவெடுப்பாய். அச்சோதை என்ற உன் பெயரிலேயே அந்த நதியை அனைவரும் அழைப்பார்கள். உனக்கு நாங்கள் காட்சி கொடுத்த இந்த அமாவாசை தினத்தில் பித்ரு தேவதைகளையும் (இறந்த முன்னோர்கள்), பித்ருக்களையும் நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும். அமாவாசை திதியில் 'நம் வம்சத்தில் பிறந்த யாராவது எள்ளும், தண்ணியும் கொடுப்பார்களா?' என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் யார் எள்ளும், தண்ணியும் கொடுக்கிறார்களோ, அவர்களது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுப்போம். அப்படி பித்ரு தர்ப்பணம் செய்பவர்களின் வம்சமும் தழைக்கும். அதோடு பித்ரு தோஷமும் விலகும்" என்று வரம் அளித்தனர்.

முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு, இந்த பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார். அப்பொழுது அவர் உடலில் இருந்து சிந்திய வியர்வைத் துளிகளே,கருப்பு எள்ளாக மாறியது. அதனால் கருப்பு எள் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியமாக கருதப்படுகிறது.

பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம். என்றாலும், நதிக்கரை, குளக்கரை, கடற்கரைகளில் செய்வது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். குளக்கரை அல்லது நதிக்கரையில் செய்யும்பொழுது, அங்குள்ள நீரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கடற்கரையில் செய்யும் பொழுது மட்டும் கடலில் உள்ள உப்பு நீரை எடுத்து பித்ரு தர்ப்பணம் செய்யக் கூடாது. மேலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கடலில் குளிக்கக் கூடாது.(ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு இந்த விதி பொருந்தாது).

கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், முதலிலேயே தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும். பொதுவாக குழந்தை பிறந்த தீட்டு அல்லது நம் உறவினர் யாராவது இறந்த தீட்டு இருக்கும் நேரத்தில், அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆனால் இந்த விதி சூரிய சந்திர கிரகங்களுக்கு பொருந்தாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது சுத்தமான இடத்தில் தரையில் தர்ப்பம் வைத்து செய்வது விசேஷம். இது நதிக்கரையில், குளக்கரையில் சாத்தியம். வீடுகளில் செய்யும் பொழுது ஒரு பித்தளை அல்லது செப்பு தட்டு வைத்து, அதில் கூர்ச்சம் (தர்ப்பம்) வைத்து தர்ப்பணம் செய்வது நன்மை தரும். எவர்சில்வர் தட்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்யும்போது, நமக்கு புகழும், நீண்ட ஆயுளும், பொருளாதார வளர்ச்சியும், சொர்க்கமும் உண்டாகும். சத்துருக்களை வெல்வதற்கான சக்தி கிடைக்கும், நம்முடைய குலம் விருத்தி அடையும்.

தகப்பனார் மற்றும் தாத்தா ஆகியோர் நம்பிக்கை இல்லாமலோ, அலட்சியத்தாலோ தர்ப்பணம் செய்யாமல் இருந்தால், அவர்களின் வாரிசு (மகன்கள்), அமாவாசை தர்ப்பணத்தை செய்வதில் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் ஆரோக்கிய குறைவு காரணமாக மற்றும் வேறு அசவுகரியத்தின் காரணமாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்டிருந்தால், அவர்களிடம் இருந்து தர்ப்பையை கொடுத்து வாங்கி சங்கல்பம் செய்து மகன்கள் தர்ப்பணத்தைச் செய்யலாம்.

தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் போன்றவற்றை அந்தந்த பிறவிகளிலேயே நாம் கட்டாயம் தீர்க்க வேண்டும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள். நம்முடன் வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் எனவும் சொல்லப்படுகிறது. பித்ரு கடன் தீர்ப்பதற்காக, சிரத்தையாக சிரார்த்தம் (திதி) செய்வது நன்மை தரும். அமாவாசை மற்றும் மாதப் பிறப்புகளில் தில தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பதால், முன்னோர்களின் சாபம் நீங்குவதுடன், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு தை அமாவாசையானது பிப்ரவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.

மேலும் செய்திகள்