தர்மபுரி
ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|ஆடிப்பெருக்கையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி தர்மபுரியில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கடரமண சாமி கோவில், எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில், ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தின் புகழ்பெற்ற வே. முத்தம்பட்டி ஆஞ்சநேயசாமி கோவிலில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழா சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக ரெயில் மூலம் சென்ற ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டனர். இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. இதில் சேலம்-தர்மபுரி இடையே சாலை மார்க்கமாக கார்களில் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.இதேபோன்று காரியமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தீமிதி விழா
தர்மபுரி அருகே நல்லகுட்லஅள்ளி நடூர் கிராமத்தில் உள்ள துரோபதையம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் தீமிதி விழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி சக்தி கரகத்துடன் முதலில் தீ மிதித்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கைக்குழந்தையுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாவி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலை பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் இந்த ஆண்டு ஒகேனக்கல்லுக்கு செல்ல முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.