< Back
ஆன்மிகம்
சாமிதோப்பு தேரோட்டம்
ஆன்மிகம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்

தினத்தந்தி
|
3 Jun 2024 12:59 PM GMT

தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறத்தலும், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் குரு சுவாமி தலைமையில் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு. தங்க பாண்டியன், குரு. ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், என்ஜினியர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யாவழி பக்தர்கள் 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சாமிதோப்பு தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தபோது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். அவர்களுக்கு அய்யா வைகுண்டசாமி அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை, உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சாமிதோப்பிற்கு வரும் பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்