கிறிஸ்தவம்: உறுதியான விசுவாசம் வெற்றி தரும்
|விசுவாசம் ஒரு வல்லமையான தெய்வீக சக்தி. விசுவாசம் மனிதனை உயிர்ப்பிக்கிறது, பிழைக்கச் செய்கிறது. தேவனுடைய மகிமையைத் தாங்கும்படி செய்கிறது.
அநேகர் 'ஐயா, எனக்கு துளி கூட விசுவாசம் இல்லை' என்று சொல்லுகிறார்கள். அப்படி சொல்லுவது தவறு. அது பொய்யும் கூட. ஏனென்றால், ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் விசுவாசத்தை பகிர்ந்து அளித்திருக்கிறார்.
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்" (எபி. 10:38).
உலகத்தில் பிறக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும், ஆண்டவர் ஓரளவு விசுவாசத்தை வைத்துதான் அனுப்புகிறார். குழந்தை பிறக்கும்போதே அதற்கு தாயின்மேல் விசுவாசம் காணப்படுகிறது. சகோதர, சகோதரிகள் மேலும் விசுவாசம் உருவாகிறது. நேரத்திற்கு நேரம் தனக்கு உணவு கிடைக்கும் என்று குழந்தை விசுவாசிக்கிறது. ஒருவன் பைப்பை திறந்தால் அதிலிருந்து தண்ணீர் வரும் என்று விசுவாசிக்கிறான். முக சவரம் செய்து கொள்ளும்போது சவரம் செய்கிறவன் கழுத்தை அறுத்துவிட மாட்டான், நன்றாக செய்து அனுப்புவான் என்று விசுவாசிக்கிறான். உணவு அருந்தும்போது உணவில் விஷம் இல்லை, அது ஆரோக்கியமானதுதான் என்று அவன் விசுவாசிக்கிறான்.
ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கும் கூட விசுவாசம் அவசியம். 'நீங்கள் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்' என்று வேதம் சொல்லுகிறது (எபே. 2:8). இந்த விசுவாசம் இரட்சிப்பிற்கேற்ற ஒரு விசுவாசம். இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார். என்னுடைய பாவங்களை ஏற்றுக் கொண்டார் என்று விசுவாசிக்கும்போது, இந்த விசுவாசம் செயல்பட ஆரம்பித்து முடிவில் மகிமையான இரட்சிப்பைக் கொண்டு வருகிறது.
'இரட்சிப்பு என்றால் என்ன?' எபே. 1:7, கொலோ. 2:14-யை வாசிக்கும்போது அது 'பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு' என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். பாவம் செய்யும்போது மனசாட்சி வாதிக்கிறது. உள்ளம் கலங்குகிறது. இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் வேதனைப்படுகிறீர்கள்.
அதே நேரத்தில் இரட்சிப்பின் அதிபதியாகிய ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவர்மேல் முழு விசுவாசம் வைக்கும்போது அவர் இரட்சிப்பை கிருபையாய் கொடுக்கிறார். அந்த இரட்சிப்பின் மூலம் நித்திய ஜீவனைப் பெறுகிறீர்கள்.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று வேதம் சொல்லுவது எத்தனை உண்மையானது!
உங்கள் விசுவாசம் சிறு விசுவாசமாக இருந்தால் அதை வர்த்திக்கப்பண்ணும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள். கேள்வியினால் விசுவாசம் வரும் என்று வேதம் சொல்லுகிறது. ஆண்டவருடைய செய்தியை கேட்கும்போதும், உயிர்ப்பிக்கும் சாட்சிகளை கவனிக்கும் போதும், ஆண்டவருடைய பிள்ளைகளோடு ஆராதித்து கர்த்தரை துதிக்கும் போதும் உங்களுடைய விசுவாசம் பெருகும்.
வேதத்தை வாசித்து தியானிக்க தியானிக்க உங்களுடைய விசுவாசம் பலம் பெறும். ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு ஜெபித்து பல பதில்களை பெற்றுக் கொள்ளும்போது உங்கள் விசுவாசம் பலமடங்கு பலனடைந்து விடுகிறது. ஆகவே விசுவாசத்தோடு வாழ உங்களை பரிபூரணமாக ஒப்புக் கொடுப்பீர்களாக.
"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபி. 11:1).