ஆன்மிகம் தெளிவோம்
|இல்லத்து பூஜை அறையில், குழல் ஊதும் கிருஷ்ணர் இருக்கும் புகைப்படத்தை வைத்து வழிபட்டுவந்தால் மகாலட்சுமி குடியிருப்பாள்.
கோவிலுக்குச் சென்று வழிபடும்பபோது, இறைவனுக்கு தீபாராதனை காட்டும் வேளையில், பலரும் இருகரம் குவித்து கண்களை மூடி வழி படுவார்கள். ஆனால் அப்படிச் செய்யக் கூடாது. நாம் இறை தரிசனத்தை காணத்தான், தீபாராதனையே காட்டப்படுகிறது. எனவே தீபாராதனையின் போது, கண்களை திறந்தபடியே தான் வழிபட வேண்டும்.
கோவிலில் உள்ள சுவாமிகளை வலம் வந்து வழிபடுவது மிகவும் அவசியம். விநாயகப்பெருமானை ஒரு முறையும், சிவன் மற்றும் முருகப்பெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்.
இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது என்பது, மிகவும் விசேஷமான வழிபாடு. அகல் விளக்கு தீபம்தான் அனைத்து தெய்வத்திற்குமான பிரதான தீபம். சில ஆலயங்களில் தேங்காய் மூடியில் தீபம், எலுமிச்சை பழத்தில் தீபம் என்று ஏற்றுகிறார்கள். ஆனால் துர்க்கை அம்மனுக்கு மட்டும்தான் எலுமிச்சைப் பழத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.
இல்லத்தில் நாம் வைத்திருக்கும் இறைவனின் திருவுருவப்படங்கள் அனைத்தும், கிழக்கு நோக்கியபடி அமைந்திருப்பது நல்லது.
கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்ததும் குளிக்கக்கூடாது. சிறிது நேரம் கழித்து முகம், கை , கால்கள் வேண்டுமானால் கழுவலாம்.
தாயார் உடல்நலத்துடன் வாழவேண்டும் என்று விரும்புபவர்கள், திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது அவசியம்.