< Back
ஆன்மிகம்
ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்
ஆன்மிகம்

ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

தினத்தந்தி
|
9 Jun 2023 9:30 PM IST

இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.

கேள்வி:- 'அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர்கள் வாயில் மண்ணு' என்பதன் விளக்கம் என்ன? (த.செல்வகுமார், தர்மபுரி)

பதில்:- 'தெய்வங்களுக்குள் வேறுபாடு பார்த்து, அவற்றில் உயர்வு -தாழ்வு கற்பிப்பவன் தீங்கினை அடைவான்' என்பதே இதன் பொருள். அனைத்தையும் படைத்து, காத்து அருள்புரியும் தெய்வ வடிவங்களில் உயர்வு, தாழ்வு கற்பிக்க, நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

கேள்வி:- தலைவிதி என்றால் என்ன? இறைவனின் அந்தத் தீர்ப்புக்கு விதிவிலக்கு உண்டா? (மு.செல்வகுமாரி, மதுரை)

பதில்:- தலைவிதி என்பது, ஏதோ தெய்வம் தன் இஷ்டப்படி செய்வதல்ல; நாம் ஏற்கனவே செய்தவைகளை அனுசரித்து, தெய்வத்தால் நமக்கு விதிக்கப்பட்டதே - விதி. அந்த விதிக்கு, விலக்கு என்றால்... அதாவது அந்த விதியின் கொடுமையில் இருந்து தப்ப வேண்டுமானால், தெய்வத்தின் காலில்தான் விழ வேண்டும். உதாரணமாக... வங்கியில் கடன் வாங்கியிருக்கிறோம். கடனையயும் அடைக்கவில்லை; வட்டியும் கட்டவில்லை. நடவடிக்கை எடுக்கிறார்கள். தாங்க முடியவில்லை. கடைசியில் வங்கி மேலிடத்திற்கு ஒரு கடிதம் அனுப்புகிறோம். "ஐயா! எனக்கு வருமானமில்லை. கடனை அடைக்க வழியேதும் இல்லை. தங்கள் வங்கியின் ஆரம்பகால வாடிக்கையாள ரான என் கடனைத் தயவுசெய்து தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்தால், வங்கி மேலாளரும் நம் நிலையை உணர்ந்து, கடனைத் தள்ளுபடி செய்கிறார் அல்லவா? அதுபோல, "தெய்வமே! என்ன செய்தேன் என்று தெரியவில்லை. செய்த வினை விதியாக வந்து படுத்துகிறது. என்னை அந்தக் கொடுமையில் இருந்து காப்பாற்று" என்று வேண்டினால், விதிக் கொடுமையில் இருந்து தெய்வம் காக்கும். சந்தேகமே இல்லை. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில், "அவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கை எழுத்தே" என இதைக் குறிப்பிடுகிறார்.

கேள்வி:- கோவில் அர்ச்சகர் தரும் விபூதி, குங்குமத்தை சிலர் கோவில் தூண்களில் வைத்து விடுகிறார்கள். அதை எடுத்து நாம் நெற்றியில் பூசிக் கொள்ளலாமா? (க.அரவிந்தன், கோயம்புத்தூர்)

பதில்:- கூடாது.

கேள்வி:- பொருள் தெரியாமல் இறைவனின் பாடல்களையோ, மந்திரங்களையோ உச்சரிப்பது, பாடுவது பாவமா? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)

பதில்:- பாவம் இல்லை. ஐம்பது பவுனில் ஒரு தங்க ஆபரணம் வைத்து இருக்கிறோம். தங்கத்தின் தராதரம் பற்றியோ அல்லது தங்க ஆபரணத்தின் மதிப்பு பற்றியோ நமக்குத் தெரியாது. இருந்தாலும் வைத்திருக்கிறோம். தேவைப்படும் போது, தங்கத்தின் தராதரம் அறிந்தவரிடம் அந்த ஆபரணத்தைத் தந்து, நம் குறைகளைத் தீர்த்துக் கொள்கிறோம் அல்லவா? தங்கத்தைப் பற்றிய எந்த நுணுக்கமும் தெரியாமல், அதை வைத்திருப்பதன் மூலமாகவே நம் குறைதீர வழி பிறந்ததைப் போல, தெய்வப் பாடல்களும் மந்திரங்களும், அவற்றின் பொருளை நாம் அறியா விட்டாலும், தக்க சமயத்தில் பலனளித்து நம்மைப் பாதுகாக்கும்.

கேள்வி:- ஓர் ஆலயத்தில் நான்கு வாசல்கள் இருக்கின்றன என்றால், எந்த வாசல் வழியாகச் செல்வது சிறந்தது? (கோ.யுவராணி, நாகர்கோவில்)

பதில்:- சில ஆலயங்களில் நான்கு கோபுர வாசல்கள் இருக்கும். கோவிலைச்சுற்றி நான்கு வீதிகளிலும் இருப்பவர்கள், தங்கள் வீதியில் உள்ள கோபுரவாசல் வழியாக உள்ளே சென்று, சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் நான்கு கோபுர வாசல்கள் இருந்தும், இன்றைய கால கட்டத்தில் நிர்வாக வசதிக்கேற்ப ஒரு வாசல் மட்டும் திறந்திருக்கும் ஆலயங்களும் உண்டு. திறந்திருக்கும் அந்த வாசல் வழியே சென்று, தரிசித்துத் திரும்புவது நல்லது. சுவாமி எந்தப்பக்கம் பாத்திருக்கிறாரோ, கருவறை எந்தப் பக்கம் பார்த்திருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள கோபுர வாசல் வழியே சென்று தரிசித்துத் திரும்புவது மிகவும் சிறந்தது.

மேலும் செய்திகள்