ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
|இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.
கேள்வி:- பண்டிகை நாட்களில் தேங்காய் உடைத்து இறை வழிபாடு செய்கிறோம். அதன் பயன் என்ன? மறதியாகத் தேங்காய் உடைக்காமல் வழிபாடு செய்தால் தோஷமா? (ஜி.காமாட்சி, திருவாரூர்)
பதில்:- மட்டை, நார், கடினமான மேல் ஓடு ஆகியவற்றை நீக்கி, வெண்மையான தேங்காயை இறைவனுக்குப் படைக்கிறோம். அதுபோல, ஆணவம் முதலான தீய குணங்களை நீக்கி, நம் உள்ளே இருக்கும் தூய்மையான மனதை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதையே அது குறிக்கிறது. மறதியாகத் தேங்காயை உடைக்காவிட்டால் பாதகமில்லை. பின்னர் தேங்காய் உடைத்துப் படைக்கலாம். கற்பூரம், வெற்றிலை-பாக்கு, பழம், தேங்காய் முதலானவற்றைத் தயார் நிலையில், பூஜைக்கு முன்பாகவே எடுத்து, கண் முன்னால் வைத்துக்கொண்டால் மறதி உண்டாகாது.
கேள்வி:- புராணம், இதிகாசங்களில் வரும் அசுரர்கள் பெரும்பாலும் சிவனைப் பூசித்து வரம் பெற்றவர்களாக இருப்பது ஏன்? (த.சத்திய நாராயணன், அயன்புரம்)
பதில்:- அசுரர்கள் பெரும்பாலும் பிரம்மதேவரை நோக்கித் தவம் செய்தே வரம் பெற்றார்கள். கரம்பன் என்பவன் அக்கினி பகவானைத் துதித்து வரம் பெற்று, மகிஷாசுரனை மகனாகப் பெற்றான். அந்த மகிஷாசுரன் வரம் பெற்றது பிரம்மதேவரிடம் இருந்துதான். மகாவிஷ்ணுவிடம் இருந்த ஜயன்-விஜயன் எனும் இருவர் அவரிடம் சாபம் பெற்று, அதன் காரணமாகவே மூன்று பிறவிகள் அசுரர்களாகப் பிறந்தார்கள். சூரபத்மன் முதலானோர் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, வரம் பெற்றார்கள். இவ்வாறு விவரிக்கும் இதிகாச-புராணங்கள், பிரம்மதேவரைப் பூசித்து வரம் பெற்ற அசுரர்களே அதிகம் என்றும் பதிவு செய்கிறது.
கேள்வி:- நடராஜப்பெருமானின் நடனத் தத்துவம் உணர்த்துவது என்ன? (ஏ.மூர்த்தி, திருவள்ளூர்)
பதில்:- நடராஜர் வடிவில்; இரு பக்கமும் விரிந்திருக்கும் சடையுடன் கூடிய நடனத்தோற்றம் உயிர்களுக்கு இறைவன் இடைவிடாது செய்யும் ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. நடராஜப்பெருமானின் வலது கால், முயலகனின் மீது ஊன்றிய திருவடியானது, ஆணவ எண்ணத்தை குறிப்பதாகவும் இறைவனின் மறைத்தல் தொழிலை உணர்த்துகிறது. இடது கால் தூக்கிய திருவடியானது சிவனின் அருளல் தொழிலைக் குறிக்கிறது. இத்திருவடியை, இடது கையின் விரல் ஒன்றைச் சுட்டிக் காட்டி, சிவனின் அருளல் தத்துவத்தை உணர்த்துகிறது. நடராஜரின் உடுக்கை ஏந்திய வலது கை படைத்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜரின் தீயை ஏந்திய இடது கை, அழித்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜரின் வலது அபய கரமானது, காத்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜப்பெருமானின் நடனத் தத்துவம் உணர்த்துவது இதுவே.
கேள்வி:- ஆண்டவனைத் தொழுதலை விட அடியார்களை வணங்கினால் பலன் அதிகம் என்று கூறுவது ஏன்? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)
பதில்:- பலன் அதிகம்தான். இதற்குத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அழகாகப் பதில் சொல்லுவார். "சூரிய வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த சூரிய வெப்பத்தை வாங்கிப் பிரதிபலிக்கும் தரையின் சூட்டைத் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும், சூரியன் எதிரில் ஒரு தாளை- பேப்பரை நீட்டினால், பேப்பருக்கு எந்தப் பாதிப்பும் உண்டாகாது. ஆனால் சூரியனுக்கும் பேப்பருக்கும் நடுவில் ஒரு `லென்ஸ்' வைத்தால், பேப்பர் எரிந்துபோய் விடும். அதுபோலத் தான் அடியார்களும். சக்தி படைத்த அவர்கள் நம் வினைகளைத் தீர்த்து நமக்கு அருள்புரிவார்கள். உதாரணம்-பெரிய புராணம். அப்பர் சுவாமி களையே தெய்வமாக எண்ணி வழிபட்ட அப்பூதி அடிகள், அல்லல்கள் எல்லாம் நீங்கி இன்பம் பெற்றார். அடியார்களின் பெருமையை அளவிட முடியாது" என்பார் வாரியார் சுவாமிகள்.
கேள்வி:- பகுத்தறிவிற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன வித்தியாசம்? (கே.முருகன், திருவண்ணாமலை)
பதில்:- நெருப்பு சுடும்; தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் என்பது பகுத்தறிவு. அவற்றைக்கொண்டு நல்ல விதத்தில் நாமும் வாழ்ந்து, அடுத்தவர்களையும் வாழ வைப்பது ஆன்மிகம்.