< Back
ஆன்மிகம்
ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்
ஆன்மிகம்

ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

தினத்தந்தி
|
29 Sept 2023 5:41 PM IST

புரட்டாசியில் தான் பிரம்மதேவர் திருப்பதியில் உற்சவம் நடத்தினார். இதை முன்னிட்டே, புரட்டாசியில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.

கேள்வி:- மூலவர், உற்சவர் இருவரில் யாரை முதலில் வணங்க வேண்டும்? (ப.சுகுமார், திருவண்ணாமலை)

பதில்:- மூலவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். பிறகே உற்சவரை தரிசிக்க வேண்டும். உற்சவர் புறப்பட்டுத் திருவீதி உலா வரும்போது, உற்சவருக்கு முன்னுரிமை; அப்போது, முன்னுரிமை மட்டுமல்ல, முழு உரிமை உற்சவருக்கே.

கேள்வி:- புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்புக் காரணம் என்ன? (ச.மலர்விழி, நாமக்கல்)

பதில்:- புரட்டாசியில் தான் பிரம்மதேவர் திருப்பதியில் உற்சவம் நடத்தினார். இதை முன்னிட்டே, புரட்டாசியில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. சனிக்கிழமை என்பது, பெருமாளுக்கு உகந்த நாள். புரட்டாசி சனிக்கிழமை முக்கியத்துவம் பெறக் காரணம் இதுவே.

கேள்வி:- சகுனம் பார்த்து, எதிரில் வருபவரை சங்கடப்படுத்துவது சரியா? (வ.மாணிக்கம், விழுப்புரம்)

பதில்:- சரியில்லை. தவறு.

கேள்வி:- இல்லறம் உயர்ந்ததா? துறவறம் உயர்ந்ததா? (த.மணிகண்டன், சென்னை)

பதில்:- இல்லறத்தில் இருப்பவர்கள் அதற்குரிய முறைப்படியும், துறவறத்தில் இருப்பவர்கள் அதற்குரிய முறைப்படியும் செயல்பட்டால், வீட்டறம், துறவறம் இரண்டும் மேன்மையே. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், இல்லறம் தான் உயர்ந்தது. காரணம்? துறவிகளுக்கு உணவிட்டு, அவர்களையும் பாதுகாப்பது இல்லறத்தார்களே. ஆகவே, இல்லறமே உயர்ந்தது.

கேள்வி:- ஆண்டாள், ராதையைப் போல், கிருஷ்ணரின் மனைவியரான ருக்மணி-சத்தியபாமா வழிபடப்படாதது ஏன்? (அ.கோகுலவாணி, திண்டுக்கல்)

பதில்:- 'ருக்மணி சத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ணமாச்ரயே' எனும் வாக்குப்படி, கண்ணனை ருக்மணி-சத்தியபாமா ஆகியோருடன் சேர்த்து தான் வணங்க வேண்டும்; வணங்குகிறோம். ஆகவே கண்ணன் வழிபாட்டிலேயே ருக்மணியும், சத்தியபாமாவும் இணைந்து விட்டார்கள்.

கேள்வி:- சனாதனம் என்பது, எதை வலியுறுத்துகிறது? (ச.அன்பு, நாகர்கோவில்)

பதில்:- சனாதனம் என்பது, உத்தமர்களான முன்னோர்களால், நல் வாழ்விற்காக வகுக்கப்பட்ட வழிமுறைகள், ஒழுக்க முறைகள். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், முன்னோர்கள் நமக்காக உருவாக்கிய சட்டங்கள். அதுமட்டுமின்றி, நாம் அவ்வப்போது செய்ய வேண்டியவைகளை விரிவாகவே அவை சொல்கின்றன. ஒரு சில உதாரணங்கள்...

தெளிவான அறிவு உடையவர்கள்; ஆரவாரம் மிகுந்த இடங்கள் (வீண் வாதப் பிரதிவாதங்கள் செய்து கூச்சலும் குழப்பமுமாக இருக்கும் இடம்), சமையற்கட்டு (சோறு சமைக்கும் இடம் தூய்மையில்லாமல் இருக்கலாம்; அங்குள்ள உணவு பற்றாக்குறை முதலியவை நம்மைப் பாதிக்கலாம்), பெண்கள் இருக்கும் இடங்கள் (நம் மனம் கெட வாய்ப்புண்டு. வீண் பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும்) ஆகியவற்றைப் பார்க்க மாட்டார்கள். அவற்றைப் பற்றிப் பேசவும் மாட்டார்கள். அந்த இடங்களில் நுழையவும் மாட்டார்கள். எனவே, அதையே மற்றவரும் செய்க!- என்று மிகமிகப் பழைமையான பைந்தமிழ் நூல்களான, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, 'ஆசாரக்கோவை' சொல்கிறது. இந்நூலை எழுதியவர் 'பெருவாயின் முள்ளியார்'.

உரற் களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்

நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்

இல்லம் புகாஅர் விடல் - (ஆசாரக்கோவை)

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'சிறுபஞ்ச மூலம்' என்ற நூல், காரியாசான் என்பவரால் எழுதப்பட்டது. ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறநெறிகள் சொல்லப்பட்டிருக்கும். அந்நூலில் இடம் பெற்றவற்றில் ஒரு சில...

எவ்வளவு தான் தங்கத்தையே கொட்டிக் கொடுத்தாலும், மிகவும் உயர்ந்ததான நிலையில் வைப்பதாகச் சொன்னாலும் சரி! ஒருவன் ஐந்து காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அவன் மறுபடியும் பிறவியெடுக்க மாட்டான்; முக்தி தான்! பொய் சொல்லாமல் இருப்பது; அடுத்தவர் பொருளைத் திருடாமல் இருப்பது; ஏழை-எளியவர்களை திட்டாமல் இருப்பது; பிற பெண்கள் தன்னை விரும்பினாலும், தான் அவர்களை விரும்பாமல் இருப்பது; உடம்பு மெலிந்து விடுமே என்று, மற்ற உயிர்களைக் கொன்று அவற்றின் சதையைத் தின்னாமல் இருப்பது. இந்த ஐந்தையும் ஒருவன் கடைப்பிடித்தால், அவனுக்கு மறுபிறவி கிடையாது.

பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியலார்

வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமை

ஓர்த்துடம்பு பேருமென்று ஊன் அவா உண்ணானேல்

பேர்த்துடம்பு கோடல் அரிது - (சிறுபஞ்ச மூலம்)

அற வழிகளை, நல் வழிகளைச் சொல்லும் இப்படிப்பட்ட நூல்களில் உள்ள ஒழுக்க நெறிகள் தான், 'சனாதனம்' என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்