< Back
ஆன்மிகம்
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
ஆன்மிகம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

தினத்தந்தி
|
12 Sept 2023 6:03 PM IST

வீட்டில் பெண்கள் விளக்கேற்ற முடியாத சூழலில், ஆண்கள் விளக்கேற்றலாம்.

* கேள்வி: வீட்டில் பெண்கள் விளக்கேற்ற முடியாத சூழலில், ஆண்கள் விளக்கேற்றலாமா? காலை-மாலை எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்? (குமார், சென்னை)

பதில்: தாராளமாக ஏற்றலாம். காலையில், சூரியன் உதிப்பதற்குள்; மாலையில் சூரியன் மறைவதற்குள் விளக்கேற்றலாம். அதாவது காலை-மாலை ஐந்து முதல் ஆறு மணிக்குள் விளக்கேற்றலாம்.

* கேள்வி: திருமஞ்சனம், மங்களாசாசனம் - இரண்டுக்குமான வித்தியாசம் என்ன? (எம்.கலியமூர்த்தி, கபிஸ்தலம்)

பதில்: திருமஞ்சனம் என்பது மங்கல நீராட்டம். அதாவது சுவாமிக்குச் செய்யப்படும், அபிஷேகம். இது திருமஞ்சனம் எனப்படும்.

மங்களாசாசனம் என்பது, அந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள தெய்வத்தைத் துதித்துப் போற்றி, மெய்யடியார்கள் பாடியது. வைணவக் கோவில்களில், ஆழ்வார்களாலும், ஆசார்ய புருஷர்களாலும் துதித்துப் பாடப்பெற்ற கோவில்களை, ''இந்த ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இந்தக்கோவில்'' என வழங்கப் படுகிறது. சைவக் கோவில்களில், நாயன்மார்களாலும் ஆசார்ய புருஷர்களாலும் பாடித் துதிக்கப்பட்ட கோவில்கள், பாடல் பெற்ற தலங்கள் என்று வழங்கப்படுகின்றன.

*கேள்வி: குலம்-கோத்திரம் பார்க்கப்படுவதன் நோக்கம் என்ன? (ஆனந்த், திருச்சி)

பதில்: குலம் மாறும்; கோத்திரம் மாறாது. குலம் என்பது குணங் களின் அடிப்படையில், நாம் செய்யக்கூடிய தொழிலை வைத்து வருவது. கோத்திரம் என்பது, ''இன்னார் பரம்பரையில் வந்தவன்'' என்று சொல்லக்கூடியது. குலம் என்பது நம்மைப் பொறுத்தது; கோத்திரம் என்பது முன்னோர்களைப் பொறுத்தது. நல்ல குணவானாக இருக்கிறானா?-என்பது, குலம் பார்த்தல் என்பதைக் குறிக்கும். நல்ல பரம்பரையில் வந்தவனா?-என்பது, கோத்திரம் பார்த்தல் எனப்படும். இதன் காரணமாகவே, ''குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து'' என்றார்கள்.

* கேள்வி: தீட்சைகள் என்பதற்கு, பல வித தீட்சைகள் எனப் பொருள் கொள்ளலாமா? அதன் விவரங்கள் என்ன? (குமார், சேலம்)

பதில்: கொள்ளலாம். தீட்சைகள் பல வகைப்படும். பார்வையாலேயே தீட்சை தருவது-நயன தீட்சை; சட்சு தீட்சை. கைகளால் தொட்டு தீட்சை தருவது-ஸ்பரிச தீட்சை. கால்களால் தீண்டி வழங்கப்படும் தீட்சையும் உண்டு. அது பாத தீட்சை, திருவடி தீட்சை. மனதாலேயே தரப்படும் தீட்சையும் உண்டு; அது மானச-மானசீக தீட்சை. இவ்வாறு தீட்சைகளில் பல விதங்கள் உண்டு. பல விதமான பண அட்டைகள் மூலம் பணம் செலவு செய்கிறோம் அல்லவா? அது போலத்தான் ஈசன் அருளைப் பெறுவதற்காகப் பல விதமான தீட்சைகள்!

* கேள்வி: ஏழு மலையான் என்று திருப்பதி சுவாமியைச் சொல்கிறோம். ஏன்? (சேகர், மதுரை)

பதில்:ஏழு மலைகளின் மேல் பெருமாள் இருப்பதால், ஏழு மலையான் என்று சொல்கிறோம். சேஷாத்திரி,கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி,நாராயணாத்திரி,வேங்கடாத்திரி -எனும் ஏழு மலைகளின் மீது பெருமாள் எழுந்தருளி இருப்பதால், 'ஏழு மலையான்' என்கிறோம்.

* கேள்வி: பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்-என்கிறார்கள். இது பத்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கிறதா? அல்லது 'பற்று' என்பது 'பத்து' என மாறி விட்டதா? அது என்ன? (அமுதா, தர்மபுரி)

பதில்: பத்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கிறது.ஔவையார் வாக்கு இது. பசி வந்தால் மனிதனிடம் உள்ள, அவனிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய பத்தும் பறந்து போய் விடும் எனப் பசியின் கொடுமையை விளக்க, ஔவை சொன்னது அந்த வாக்கு.

மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை,

தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை-தேனின்

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல், பத்தும்

பசி வந்திடப் பறந்து போம் (ஔவையார் பாடல்)

மேலும் செய்திகள்