ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்
|குலதெய்வக் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது, கண்டிப்பாகச் சென்று வழிபடுவது நல்லது என்கிறார் 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.
கேள்வி:- குலதெய்வம் கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் சென்று வந்தால் போதுமா? (வீ.அறிவொளி, புதுச்சேரி)
பதில்:- குலதெய்வக் கோவில் அருகில் இருந்தால், நாள்தோறும் சென்று வரலாம்; சற்று தள்ளியிருந்தால், வாரம், மாதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்று வரலாம். குலதெய்வக் கோவில் எங்கு இருந்தாலும் சரி! எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி! ஆண்டுக்கு ஒரு முறையாவது, கண்டிப்பாகச் சென்று வழிபடுவதே நல்லது.
கேள்வி:- நீண்ட சிகைக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ஜடாமுடியின் ரகசியம் என்ன? (ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு)
பதில்:- நீண்ட சிகைக்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை; ரகசியமும் கிடையாது. உத்தமமான முனிவர்களின் தோற்றத்தை விவரிக்கும்போது, அவ்வாறு விவரித்திருந்தார்கள். இதைப் பிரகலாதன், தன் குருவினிடம் பேசும்போது, "முண்டித்தும் நீட்டியும்" எனக் கூறுவதாகக் கம்பர் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் குறிப்பிடுகிறார். அடுத்தது; சமணர்கள் துறவு ஏற்கும்போது, தலையில் உள்ள முடிகளைத் துறவுக்கு அடையாளமாக அகற்றி விடுவார்கள். மற்றபடி, சடைமுடி வளர்ப்பதில் ரகசியம் எதுவும் கிடையாது.
கேள்வி:- இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றிற்கான விளக்கம் என்ன? (க.பெ.ரத்தினசாமி, கூடுவாஞ்சேரி)
பதில்:- ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது, இச்சா சக்தி. அந்தச்செயலைச் செய்யும்படியாகச் செய்வது, கிரியா சக்தி. அந்தச் செயலைத் தெளிவாக, முழுமையாக உணர்ந்து செய்து முடிப்பது, ஞான சக்தி.
கேள்வி:- 'சித்தம் போக்கு சிவம் போக்கு' என்பதன் விளக்கம் என்ன? (எம்.கலியமூர்த்தி, கபிஸ்தலம்)
பதில்:- சிவம் என்ற சொல்லுக்கு சுபம், மங்கலம் என்பது பொருள். சித்தத்தில் என்பதற்கு மனதில் என்பது பொருள். 'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பதைத் தான், 'சித்தம் போக்கு சிவம் போக்கு' எனச்சொல்லி வருகிறோம். சித்தர்கள் அனைவரும், பெரும்பாலும் சிவனையே வழிபட்டுப் பாடியவர்கள். அவற்றில் ஒரு சில...
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித்திரிந்து சிவபெருமான் என்று பாடுமின்!
பாடிப் பணிமின்! பணிந்த பின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே
-என்பது சிவ வாக்கியர் பாடல்.
பட்டினத்தார் சிவபெருமானை எண்ணியெண்ணி, தானே சிவலிங்கமாக மாறியவர்.
விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டுமிரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுக துக்கம் அற்று விட்டேன் தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும் பரம் என்னிடத்தே வந்திங்கு எய்தியதே
-என்ற பாடல் மூலம் 'என் சித்தம் போனவழியில் சிவன், தானே தேடி வந்து, என்னை ஆட்கொண்டார்' என்று பட்டினத்தார் பாடுகிறார். இவ்வாறு சித்தர்களின் போக்கு சிவன் போக்காகவே இருந்ததைக் குறிக்கும் பழமொழி அது.
கேள்வி:- சித்தர்களின் ஜீவ சமாதி மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது ஏன்? (ஏ.மூர்த்தி, திருவள்ளூர்)
பதில்:- சிவலிங்கம்- அரு உருவ நிலை! உருவம் தெரிகிறது; ஆனால் கண், காது, கை, கால் என்று எதுவும் இல்லை. அதே சமயம் அதன் பார்வையும், கேட்பதும், கொடுப்பதும், செல்வதும், எல்லாப் பக்கங்களிலும் நிறைந்திருக்கிறது என்பதன் தத்துவார்த்தமே சிவலிங்கத்தின் அரு உருவ நிலை. சித்தர்களின் நிலையும் அதே! நல்லவர் யார் எது கேட்டாலும், அவர்களைத் தேடிச்சென்று, அவர்களுக்கு எந்தவிதமான பேதமும் பார்க்காமல், அருள்புரிபவர்கள் சித்த புருஷர்கள். அதன் காரணமாகவே, சிவனை எண்ணியெண்ணி, தெய்வீக நிலையடைந்த சித்தர்களின் ஜீவசமாதி மேல் சிவலிங்கம் வைக்கப்படுகிறது.
கேள்வி:- வலம்புரி சங்கின் சிறப்பு என்ன? அதை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது எப்படி? (எம்.ஏ.கார்த்திகேயன், ஈரோடு)
பதில்:- வலம்புரி சங்கு உள்ள இடத்தில் தீய சக்திகள் அண்டாது. வலம்புரி சங்கினால் நீரோ, பாலோ எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வது விசேஷம். வலம்புரி சங்கைத் தரையில் வைக்கக்கூடாது. மூன்று கால்கள் கொண்ட ஒரு சிறிய தாங்கு பீடத்தில் வைக்கலாம். அதன் மேல், துளசியோ, வில்வமோ, ஏதாவது ஒன்றை எப்போதும் இருக்கும்படியாக வைக்க வேண்டும்.