< Back
ஆன்மிகம்
ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்
ஆன்மிகம்

ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

தினத்தந்தி
|
25 Aug 2023 12:13 PM GMT

ஐம்புலன்களை அடக்குவது என்பது ஐம்புலன்களைப் பக்குவப்படுத்துவது என்று பொருள்படும்.

கேள்வி:- கடவுள் அன்பு மயமானவர் என்கிறார்கள். ஆனால் காளி, துர்க்கை, நரசிம்மர், பைரவர் போன்ற சில கடவுளர்கள், பயமுறுத்தும் தோற்றத்தில் இருப்பது ஏன்? (ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு)

பதில்:- இரணியகசிபு எனும் தீயவனை அழிக்க, மகாவிஷ்ணு கொண்ட வடிவம்-நரசிம்ம வடிவம்! மகிஷாசுரன் முதலான இரக்கமில்லா அரக்கர்களை அழிக்க, அம்பிகை கொண்ட வடிவம்-காளி வடிவம்! தேவர்கள் எல்லாம் ஆணவம் கொண்டு அலைந்த போது, அதை நீக்க சிவபெருமான் கொண்ட மறு வடிவம்-பைரவ வடிவம்! இந்த வடிவங்கள் தோற்றத்தில் பயமுறுத்தும் வடிவத்தில் இருந்தாலும், அதன் அடிப்படை காரணம், அடியார்களிடம் கொண்ட கருணை மட்டுமே! காவல்காரரைக் கண்டு கள்வர்கள் பயப்படலாம். அவர் குழந்தைகள் ஏன் பயப்பட வேண்டும்? நாம் தெய்வத்தின் குழந்தைகள் எனும்போது, இப்படிப்பட்ட வடிவங்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

கேள்வி:- பெரியவர்களை மதிக்காதவர்கள், எந்த நேரமும் எரிந்து விழுபவர்கள் எல்லாம், விரதம் இருந்தால் மட்டும், அந்தப் பக்தியை இறைவன் ஏற்றுக் கொள்வாரா? (வி.ஹேமாவதி, சென்னை)

பதில்:- ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

கேள்வி:- தாமரை மணி மாலையை அனைவரும் அணியலாமா? (ஜி. செல்வமுத்து குமார், சிதம்பரம்)

பதில்:- தாமரை மணி மாலையை அனைவரும் அணியலாம். ஜபம் செய்பவராக இருந்தால், ஜப மாலை தனியாகவும், அணியும் மாலை தனியாகவும் இருக்க வேண்டும்.

கேள்வி:- மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்குவதே கடினம் என்னும்போது, அவற்றை எப்படி வெல்வது? (கே. முருகன், திருவண்ணாமலை)

பதில்:- வெளிப் பார்வைக்குத் தெரியும் படியாக இருக்கும் பகைவர்களை, ஏதாவது ஒரு வழியில் வெல்லலாம். ஆனால் கூடவே இருந்து குழி பறிக்கும் பகைவர்களை வெல்வது கடினம்தான். ஆனால் வேறு வழியில்லை. மேலும் இங்கே வெல்வது என்பது, சண்டை போட்டு வெல்வது அல்ல. 'ஐந்து அவித்தான் ஆற்றல்', 'பொறி வாயில் ஐந்து அவித்தான்' என்னும் திருவள்ளுவர் சொற்படி, ஐம்புலன்களை அடக்குவது என்பது ஐம்புலன்களைப் பக்குவப்படுத்துவது என்று பொருள்படும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உணவுப்பொருட்கள் பலவற்றை அப்படியே நாம் உண்ண முடியாது. அவற்றை அவித்து, அதாவது பக்குவப்படுத்தி சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல, ஐம்புலன்களின் செயல்பாட்டை அடக்க முடியாது. ஆனால் பக்குவப்படுத்தலாம். 'நல்லதைச் செய்!, நல்லதைக் கேள்!, நல்லதைச் சொல், நல்லதைப் பார்!' என்றெல்லாம் நம் ஞான நூல்கள் சொல்வது, ஐம்புலன்களை வெல்வதற்காகவே; அதாவது பக்குவப்படுத்துவதற்காகவே. அவ்வாறு பக்குவப்படுத்தினால் ஐம்புலன்களும் நம் வசப்படும்.

கேள்வி:- சாளக்கிராம கல்லின் சிறப்பு என்ன? (ராணி, மதுரை)

பதில்:- விதேக நாட்டு இளவரசி பிரியம்வதா என்பவள், மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தாள். தவத்தின் விளைவாக, அவள் கண்டகி நதியாக வர, மகாவிஷ்ணு அந்த நதியில் சாளக்கிராமமாக வந்தார் என்பது சாளக்கிராமம் உருவான வரலாறு. துளசியைத் தொடர்புபடுத்தி, மற்றொரு வரலாறும் சொல்வதுண்டு.

சாதாரணமாக, சாளக்கிராமம் என்பது கறுப்பாக, உருண்டையாக இருக்கும் என்பதே, அனைவரும் அறிந்த தகவல். ஆனால் சாளக்கிராமத்தில் பலவித வண்ணங்களும் வடிவங்களும் உண்டு. சாளக்கிராமம் கண்டகி நதியில் உற்பத்தி ஆகிறது. அதன் மேலுள்ள அடையாளங்களை வைத்து, அது எந்தத் தெய்வத்தைச் சேர்ந்த சாளக்கிராமம் என்பதை அறியலாம்.

அந்த வடிவங்களைப் பற்றிய தகவல்கள்: மச்ச சாளக்கிராமம், கூர்ம சாளக்கிராமம், லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம் என்றெல்லாம் உண்டு. நீளமான முகம், பெரிய சக்கரம், அகன்ற உள்பகுதி, கோரைப்பல் ஆகியவற்றுடன் காட்சி தரும் சாளக்கிராமம்,'நரசிம்ம சாளக்கிராமம்'. இதை சன்னியாசிகளும் பிரம்மசாரிகளும் மட்டுமே பூஜை செய்யலாம்.

வில், அம்பு, பெருத்த நீண்ட வடிவம், புள்ளிகள், நடுவில் சக்கரம், பல துவாரங்கள் ஆகியவற்றுடன் கறுப்பாக இருப்பது, ஸ்ரீ ராமசந்திர சாளக்கிராமம். அபூர்வமானது. சென்னையில் காரணோடைக்கு அருகில் 'எருமை வெட்டிப்பாளையம்' எனும் இடத்தில்,சிறு மலை மேல் ஒரு ராமர் கோவில் உள்ளது. அங்கு ஸ்ரீராமரின் மடி மீது சீதாதேவி அமர்ந்து இருப்பதைப் போன்ற வடிவம். மிகவும் அழகானது; முழுவதும் 'சாளக்கிராமங்களால்' ஆனது. சாளக்கிராம வழிபாட்டினால் உண்டாகும் பயனை அடைய விரும்புகிறவர்கள், அங்கு சென்று அந்த ஸ்ரீராமரைத் தரிசித்து நன்மைகள் அடையலாம். சாளக்கிராமத்தின் மீது எப்போதும் துளசி இருக்க வேண்டும்.

மேலும் செய்திகள்