< Back
ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருநெல்வேலி
ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
31 Aug 2022 1:45 AM IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று நெல்லை மாநகர பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட உள்ளனர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று நெல்லை மாநகர பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் 4-வது நாள் சதுர்த்தி திதியாகும். இந்த சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபட்டு வருபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதில் முக்கியமாக ஆவணி மாதம் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதி மிகவும் முக்கியமானது.

விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியம் படைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுபவர்களுக்கு துன்பங்களும், துயரங்களும் உடனே நீங்கி விடுவதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

தனி சிறப்பு

அரச மரம், ஆலமரம், வன்னி மரம் ஆகிய மரங்களுக்கு அடியில் இருக்கும் விநாயகருக்கு தனி சிறப்பு உண்டு. மேலும் எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவை விநாயகருக்கு மாலையாக சூட்ட வேண்டிய பொருட்களாகவும் இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு தவறாமல் வைக்க வேண்டிய நைவேத்திய பொருட்கள் சுண்டல், பிடி கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அரிசி பொரி, அவல் பொரி, சர்க்கரை பொங்கல் ஆகியவை ஆகும்.

இன்று வழிபாடு

விநாயகர் சதுர்த்தி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. நெல்லை டவுன் சந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இரவு 7 மணிக்கு விநாயகர் வீதி உலா நடக்கிறது.

தியாகராஜநகர்

தியாகராஜநகர் விக்னவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி நேற்று காலையில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு விநாயகர் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் நெல்லை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெறுகிறது.

களக்காடு

களக்காட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் களக்காடு தோப்புத்தெரு, தேரடி, மூங்கிலடி, சிதம்பராபுரம், டோனாவூர், பண்டிதன்குறிச்சி, காமராஜ்புரம், நெடுவிளை, பத்மநேரி, இடையன்குளம், கீழ உப்பூரணி, கீழதேவநல்லூர், கள்ளிகுளம், மாவடி, மாவடி புதூர், குளத்துக்குடியிருப்பு, கட்டளை, திருக்குறுங்குடி, ஏர்வாடி உள்ளிட்ட 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி களக்காடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்